யார் மனசுல யாரு? முடிவு மக்கள் கையில்!

இந்த இதழ் வாசகரை அடையும் ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து, இன்னும் சில தினங்களில் வாக்குப் பதிவு. இன்று சில ஊடகங்களின் தி.மு.க ஆதரவுதான், மாநிலத்தில் தற்போது நிலவும் அதிருப்தி அலையை வெளிப்படுத்தாமல் மூடி மறைக்கிறது. ஆனால், மக்களைக் குறைத்து மதிப்பீடு செய்வது தி.மு.க.வின் படுதோல்விக்கே வழிவகுக்கும்.

தமிழக சட்டசபைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், கொளுத்தும் கோடையைப் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகளின் பிரசாரம் களைகட்டிவிட்டது. தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் கூட்டணி பேரங்கள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. ஆனால், ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆகியவற்றில் அதிருப்தி அலை இருப்பது தெரிகிறது. கூட்டணி பற்றிய கவலையில்லாத நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தான் இப்போது நிம்மதியாக இருக்கின்றன. அவற்றுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை.
தேர்தல் கூட்டணி என்றாலே கொள்கையைத் தள்ளிவைத்து, வெற்றி வாய்ப்புகளுக்காக கரம் கோர்ப்பதுதான். அதிலும், தமிழகத்தில் திமுக -− அதிமுக என்ற இரு துருவ அரசியல் நிலவினாலும், இரு கட்சிகளுடனும் பிற கட்சிகள் கூடிக் குலாவி, பிரிந்து, மீண்டும் குலாவுவது ஒரு அரசியல் நெறிமுறையாகவே மாறிவிட்டது.
கூட்டணி பேரங்களில் இந்த முறை திமுக பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்திருக்க மாட்டார். விஜய்யின் கட்சியுடனோ அதிமுகவுடனோ தேமுதிக கூட்டணி வைத்துவிடக் கூடாது என்ற அவசரத்தில், அக்கட்சிக்கு 10 சட்டசபைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் அளிப்பதாக திமுக அறிவித்தது, கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு புகைச்சலை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுதைகள் ஆகிய கட்சிகள் தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வற்புறுத்தின. ஆனால், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து போராடியும் கூட, சென்ற தேர்தலை விட ஓரிடம் குறைவாக (தலா 5 தொகுதிகள்) மட்டுமே பெற முடிந்தது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்த திருமாவளவன் 8 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. திமுகவின் இந்த முடிவு கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதைவிடக் கொடுமை, கூட்டணிக் கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக தலைமை நிபந்தனை விதிப்பது. ஒருகாலத்தில் மு.கருணாநிதிக்கு எதிராக ம.தி.மு.க.வை உருவாக்கிய வைகோ, இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, 4 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக் கொண்டிருக்கிறார். அதிலும் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி. இது ம.தி.மு.க தொண்டர்களை அவமதிப்பது போலிருப்பதாக அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
கொமதேக (ஈஸ்வரன்), ம.ஜ.க, ம.ம.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை (கருணாஸ்) ஆகியவையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள். மொத்தத்தில் திமுக 164 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கி இருக்கிறது திமுக தலைமை.
திமுகவுக்கு மாற்றான அதிமுகவும் சளைக்கவில்லை. அக்கட்சி 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. 66 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. பாஜக – 27, பாமக (அன்புமணி) – 18, அமமுக – 11, த.மா.கா – 5 ஆகியவை முக்கியமான கூட்டாளிகள். தவிர இந்திய ஜனநாயகக் கட்சி (பாரிவேந்தர்), புரட்சிபாரதம் (பூவை மூர்த்தி), புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்), த.ம.மு.க (ஜான் பாண்டியன்) ஆகியவையும் இக்கூட்டணியில் உள்ளன. அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் சில கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. த.மா.கா (5 தொகுதிகள்) பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணி போல மனக்கசப்புகள் அதிமுகவில் இல்லை. பாஜகவுக்கு அளித்த 27 தொகுதிகளில், 12 தொகுதிகள் திமுக அமைச்சர்களின் தொகுதிகள் என்பதால், லாகவமாக பாஜகவிடம் தள்ளிவிட்டது அதிமுக என்கின்றனர். ஆனால், ‘மாநில ஆட்சி மீதான அதிருப்தி அலை கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் போல பாய்ந்து கொண்டிருப்பதால், இது பாஜகவுக்கு லாபம் தான்’ என்கிறார் பத்திரிகையாளர் துக்ளக் சத்யா. இது தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டும்போது உறுதியாகும்.
அதேபோல, பாஜகவுக்கு செல்வாக்குள்ள கோவை மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளை அறிவித்திருக்க வேண்டும்; முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட ஒரு தொகுதியை அளித்திருக்க வேண்டும் என்பது சோஷியல் மீடியா போராளிகளின் முறைப்பாடு. ஆனால், சென்ற தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகளை பா.ஜ.க கேட்பது நியாயமில்லை என்கிறார்கள் அதிமுகவினர். அமித்ஷாவும், பியூஷ் கோயலும் பார்வையிட்டு சம்மதம் தெரிவித்த பிறகே, தொகுதிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக அவர்கள் கூறுவதில், உண்மை இல்லாமல் இல்லை.
இந்தத் தேர்தலில் பெரும் விளைவுகளை உருவாக்குவார் என்று நம்பப்படும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இன்னமும் கிளம்பவில்லை. அக்கட்சிக்கு தனித்துப் போட்டியிடும் வலிமையோ கட்டமைப்போ இல்லை. அதேசமயம் அதனுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க தயாரில்லை. த.வெ.க.வுக்கு 30 தொகுதிகள் கொடுப்பதாக அதிமுக கூறியபோது, 90 தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் வேண்டும் என்ற சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைத்த விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியால் பேச்சுவார்த்தை முறிந்ததாக தகவல். என்றபோதும், திமுகவை பிரதான எதிரியாக வரித்து நடிகர் விஜய் முழங்குவதால், திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தவெக கட்சி தலைவர் விஜய், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு கிடைக்கும் வாக்குகள் திமுகவின் பாரம்பரிய சிறுபான்மை வாக்கு வங்கியை பிரிக்கும் என்கிறார்கள். வரும் நாட்களில் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கலாம்.
சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனி ஆவர்த்தனம் செய்கிறது. தேர்தல் செலவுகளுக்காக திரள்நிதி வசூலில் இறங்கி இருக்கிறார் அவர். மகனுக்கு எதிராக புலம்பிக் கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வின் சின்னத்தை முடக்க கடும் முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்திருக்கிறார். அவர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகாலாவின் புதிய கட்சியான அ.இ.பு.த.ம.மு.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்திருக்கிறார். வயதான காலத்தில் இவருக்கு ஏன் இந்த வீண்வேலை என்று பலரும் பரிதாபப்படுகின்றனர்.
தி.மு.க கூட்டணிக்கு எதிராக 2021 தேர்தலில் புரட்சிகரமாக முழங்கி, பிறகு தி.மு.க.வில் ஐக்கியமாகி ராஜ்யசபா உறுப்பினராகிவிட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், தி,மு,க,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். டார்ச்லைட்டால் டி.வி. பெட்டியை உடைத்த கமலை நம்பி ஏமாந்தவர்களின் அவல நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி 297 வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரப் பயணத்தையும் தொடங்கிவிட்டார். அரிசி அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குளிர்சாதனப்பெட்டி வழங்கப்படும் என்ற அவரது அறிவிப்பு திமுகவை நிலைகுலையச் செய்திருப்பது நிஜம். குடும்ப சிறப்பு உதவித் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்; மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 2,000 வழங்கப்படும்; ஒரு குடும்பத்துக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்; ரேஷனில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் இலவசமாக வழங்கப்படும்; விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இப்படி பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடியார்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையால் மிரண்டுபோயுள்ள தி.மு.க.வும் அதிரடியான இலவச அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல். ஏற்கனவே ரூ. 10 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ள தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும், பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
முதல் சுற்றில் அ.தி.மு.க முந்துவது தெளிவாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் 23 கட்சிக் கூட்டணி என்று கூறிக்கொண்டு தெம்பாக வலம் வந்த தி.மு.க, இப்போது கூட்டணி பேரங்களால் சுணங்கி இருக்கிறது. தனியரசு, வேல்முருகன் ஆகியோருக்கு இம்முறை தொகுதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் திமுகவுக்கு எதிராக வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆரவாரமற்ற செயல்பாடுகளைக் கண்டு உடன்பிறப்புகளே ஆச்சரியப்படுகின்றனர்.
ஊடகங்களின் தி.மு.க ஆதரவுதான், இப்போது, மாநிலத்தில் நிலவும் அதிருப்தி அலையை வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கிறது. ஆனால், மக்களைக் குறைத்து மதிப்பீடு செய்வது தி.மு.க.வின் படுதோல்விக்கே வழிவகுக்கும் என்பது, அரசியல்களம் பல கண்ட நிபுணர்களின் பார்வை.
கட்டுரையாளர்: எழுத்தாளர்