நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் பாரதிய கல்வி மறுமலர்ச்சிக்காக அகில பாரத அளவில் பணியாற்றி வரும் முதன்மையான தன்னார்வத் தொண்டு நிறுவனம் வித்யாபாரதி பற்றி அறிவோம்…
டாக்டர் ஹெட்கேவாரின் வழிகாட்டுதலில், 1933லேயே நாக்பூரில் ‘நவ்யுக்’ என்ற வித்யாலயம் உருவாகியது. 1939ல், பாளாசாகேப் தேவரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தது. மஹாராஷ்ட்ராவின் பல பகுதிகளிலும் இத்தகைய வித்யாலயங்கள் வளர்ந்தன. 1946ல், குருஜி அவர்களால் குருக்ஷேத்ரத்தில் இரு வித்யாலயங்கள் துவக்கப்பட்டன.
1952ல், உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் நகரில் ‘சரஸ்வதி சிசு மந்திர்’ என்ற பெயரில், சிறு வித்யாலயம் தொடங்கப்பட்டது. இந்தக் கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதிலும் பரவ ஆரம்பித்தன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க, 1977ல் ‘வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தான்’ உருவாக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சிறு ஊற்றாக ஆரம்பித்து, இன்று விரிந்து பரந்து புனித கங்கையைப் போல வித்யாபாரதியின் பணி நாடெங்கிலும் வளர்ந்து, இன்றைக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆலமரம் போல் விரிந்து நிற்கிறது.
வித்யாபாரதியின் குறிக்கோள்:
தேசியக் கல்வி முறையை மலரச்செய்து, அதன் மூலம் நமது இளைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தின் மேல் ஆழ்ந்த பற்று உடையவர்களாகவும், தேசபக்தி நிறைந்தவர்களாகவும் பரிணமிக்க வேண்டும். அவர்களது உடல், உள்ளம், ஆன்மா, புத்தி மற்றும் ஆன்மீகப் பார்வையிலும் முழுவளர்ச்சி உடையவர்களாய்த் திகழ வேண்டும். வாழ்க்கையின் இன்றைய எல்லா சவால்களையும் உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும், வெற்றிகரமாகவும் சந்தித்து வெற்றி அடைபவர்களாகத் திகழ வேண்டும்.
பஞ்சாங்க சிக்ஷண பததி: (ஐந்து அங்கங்கள் கொண்ட கற்பித்தல் முறை)
அனைத்து வித்யாலயங்களிலும் இக்கல்வி முறையானது பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக விடுதியுடன் இணைந்த வித்யாலயங்களில் இவற்றை பெருமளவு திறம்பட செயல்படுகிறது – ஷாரீரிக் (உடற்கல்வி), யோகசிக்ஷா (யோகா), ஸம்ஸ்க்ருதம் (ஸம்ஸ்க்ருத மொழி), சங்கீத சிக்ஷா (இசை), நைதிக் மற்றும் ஆத்யாத்மிக் சிக்ஷா (வாழ்க்கை நெறிக் கல்வி).
வளர்ச்சியைக் குறிக்கும் சாதனைகள்:
தேசியக் கல்வியாளர் குழு: அரசு நிர்ணயித்த பாடத்திட்டங்களை ஆய்வு செய்கிறது. ஆசிரியர்களின் திறன் வளர்க்கவும், கல்வியின் நிலையினை மாற்றவும் இக்குழு திட்டமிடுகிறது. வித்யாபாரதியின் நெறிமுறைகளின்படி, சிறப்பாக வித்யாலயத்தை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் முகாம்கள் மூலம் பயிற்சி அளிக்கிறது.
பாரதிய கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்: பாரதியக் கல்வி சித்தாந்தத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்கிறது.
ஆசிரியர்களுக்கான முறையான, நிரந்தர, முழுமையான பயிற்சி: கற்பிக்கும் திறனை அதிகரித்து சேவை மனப்பான்மையோடு செயலாற்றும் வகையில், வருடத்தில் 10,000 ஆசிரியர்களுக்கு 3-50 நாட்கள் வரையிலான முகாம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிசுவாடிகா : ‘வீடே வித்யாலயம்’ என்னும் நோக்கில் மழலைகளுக்கு ஆரம்பக் கல்வியானது, புத்தகச் சுமையின்றி விளையாட்டு, பாட்டு, நடனம், கதை ஆகியவற்றின் மூலம் அருண (L.K.G), உதய (U.K.G.) வகுப்பு நிலைகளில் தாய்மைப்பண்போடு கற்பிக்கப்படுகின்றது.
அகில பாரத பண்பாட்டுக் கல்வி அமைப்பு: நமது தாய்நாட்டின் இயற்கை வளங்கள், புனித ஸ்தலங்கள், பெருமைக்குரிய புராதன கலைச்சின்னங்கள், ரிஷி, முனிவர்கள், மஹான்கள், ஞானிகள், வீரதீரர்கள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பங்களில் நமது மேன்மைநிலை, விளையாட்டு வீரர்கள் பற்றிய விவரங்களையும், பெருமைகளையும் அறியச் செய்வதற்காக ஸம்ஸ்க்ருதி ஞானபரீக்ஷா (பண்பாட்டுப் பொதுஅறிவுத் தேர்வு) திட்டத்தை 4 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அகில பாரத விளையாட்டு விழாக்கள்: விளையாட்டு விழாக்கள் மூலம் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குகின்றது. மேலும் தேசபக்தி, ஒருங்கிணைந்து செயலாற்றும் திறன் மற்றும் ஆளுமைப் பண்புகளை மாணவர்கள் பெறவும் வழி வகுக்கின்றது. மாபெரும் சீருடை அணிவகுப்பு, ஊர்வலங்கள், மஹா சம்மேளனங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துகிறது.
அகில பாரத அறிவியல் கண்காட்சிகள்:
மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் அறிவியல் விழாக்களை நடத்தி வருகிறது. வித்யாலயம் முதல் அகில பாரதம் வரை பல்வேறு அளவுகளில் போட்டிகளும், கண்காட்சிகளும் நடத்தி வருகின்றது.
வேத கணிதம்: கால்குலேட்டர், கம்ப்யூட்டர் போன்ற கருவிகள் இல்லாமல் பல படிகளைக் கொண்ட பெருக்கல், வகுத்தல், உள்ளிட்ட எல்லாவிதமான கணக்குகளையும் நொடியில் செய்துவிட வேத கணிதப் பயிற்சி உதவுகிறது.

வித்யா பாரதியின் சிறப்பு அம்சங்கள்:
நாட்டின் தொலைதூரப் பிரதேசங்களில் வித்யாலயங்கள் நிறுவுதல் (அந்தமான் தீவுகள், பஸ்தர், தென்பீஹார், ஜம்மு-காஷ்மீர், லே, நேபாளம், ஜெய்சல்மர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கல்விப்பணி)
60%க்கும் மேற்பட்ட வித்யாலயங்களை கிராமப்புறங்களிலேயே நிறுவியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குருகுலங்கள், – 2,500க்கும் மேற்பட்ட ஓராசிரியர் வித்யாலயங்கள், ஸங்கீத வித்யாலயம் – குருஷேத்ரம், குடிசைப் பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட பண்பாட்டு மையங்கள்,- பெண்களுக்கான எழுத்தறிவு மையங்கள்,- வனவாசிகளுக்கான எழுத்தறிவு மையங்கள்,- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் தேசிய திறந்தவெளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து 3,5,8ம் வகுப்பு நிலைகளில் தேர்வு நடத்தும் ஒரு மையமாக வித்யாபாரதி செயல்படுகிறது, பல்வேறு நிவாரணப்பணிகளில் பங்கேற்பு, -தொழுநோயால், பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு இலவச விடுதியுடன் கூடிய வித்யாலயங்கள், – சாரணர் இயக்கம் (Hindustan Scouts and Guides), ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்திற்கே உரிய ஒரு பாரம்பரிய விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. உதாரணமாக கேரளத்தில் களரி, கர்நாடகத்தில் மல்லுக்கம்பம், தமிழ்நாட்டில் சிலம்பம், ஆகியவற்றைக் கூறலாம்.
வித்யா பாரதியின் பணிகள் தேசிய அளவில் 86 சதவீத மாவட்டங்களைச் சென்றடைந்துள்ளது. தோராயமாக 13,000 பள்ளிகள், 40 லட்சம் முன்னாள் மாணவ-மாணவியர்கள் மற்றும் 1.5 கோடி குடும்பங்கள் தொடர்பில் உள்ளன.
பழங்குடியினர் பகுதிகளில் வித்யாபாரதி:
வித்யாபாரதி 1,000 உண்டு உறைவிடப்பள்ளிகளை நடத்துகிறது. வடகிழக்கு, ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது.
“வனவாசி கல்யாண் கேந்திரா” என்ற பெயரில் நகர்ப்புற விடுதிகளில் தங்கியுள்ள சுமார் 20,000 பழங்குடி மாணவ- மாணவியர்களுக்கு உணவு மற்றும் இலவசக் கல்வியை வழங்குகிறது.
எல்லைப் பகுதிகளில் வித்யாபாரதி:
பாரதம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சீனா மற்றும் மியான்மர் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள 127 மாவட்டங்களில் 167 ஒன்றியங்களில் (மொத்தம் 323 ஒன்றியங்கள்) 211 பள்ளிகள் செயல்படுகின்றன. மீதமுள்ள 156 தொகுதிகளிலும், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, எல்லையிலிருந்து 40 கி.மீ. வரையிலான பகுதியை உள்ளடக்கும் வகையில் பள்ளிகளை நிறுவ வித்யாபாரதி முயற்சித்து வருகிறது.
வித்யாபாரதி சைனிக் பள்ளிகள்:
ஒரு புதுமையான நடவடிக்கையாக, தனியார் பள்ளிகளுடன் இணைந்து 100 ராணுவப் பள்ளிகளைத் திறக்க பாரத அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக ராணுவப் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் மட்டுமே நடத்தப்பட்டன. தற்பொழுது அந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதுவரை ஒதுக்கப்பட்ட 42 பள்ளிகளில், 7 வித்யபாரதி பள்ளிகள் சைனிக் பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஒதுக்கீடுகள் காத்திருக்கின்றன. சைனிக் பள்ளி, தேசத்திற்கு சேவை செய்ய பாரதப் படைகளில் சேர மாணவர்களைத் தயார்படுத்துகிறது.
சப்த சக்தி சங்கமம்:
இந்த கல்வி ஆண்டில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் தாய்மையை போற்றும் விதமாக “சப்த சக்தி சங்கமம்” நிகழ்ச்சிகள், பள்ளிகள் அளவில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 2025 அக்டோபர் முதல் 2026 ஜனவரி வரை நடைபெறும் இந்த சங்கமத்தில், இதுவரை தமிழகம் முழுவதும் 140 பள்ளிகளில், 185 சப்தசக்தி சங்கம நிகழ்ச்சிகளில், 27,000 தாய்மார்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 2026 ஜனவரி மாத இறுதிக்குள், 50,000 தாய்மார்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
கட்டுரையாளர் : வித்யாபாரதி மாநிலச் செயலாளர், வடதமிழகம்
– சி. இராம்குமார்