வாழ்வியல் வழியே விஸ்வ குரு ஆவோம்

“எனக்கு முன் உரையாற்றிய பதினேழு பேச்சாளர்களும் ‘மதம் ‘ என்ற வார்த்தையையே கூறியதால், நானும் எங்கள் ஹிந்து வாழ்வியல் முறையை ஹிந்து மதம் என்று கூறுகிறேன்; உலகிலுள்ள மதங்களுக்கெல்லாம் தாயான ஹிந்து மதத்தின் சார்பாக பேச வந்துள்ளேன் ” என 1893 சிகாகோ ஸர்வ மத மாநாட்டில் உலகுக்கே கேட்கும் வகையில் உரக்கக் கூறினார் ஸ்வாமி விவேகானந்தர்.

உண்மை தானே! ஹிந்துத்வம் என்பது சனாதன தர்மம் வகுத்த வாழ்வியல் முறை இந்த புண்ணிய பூமியில் பிறந்தவர்களும், இங்கு குடியேறியவர்களும், காலங்காலமாகப் பின்பற்றும் வாழ்க்கை நெறிமுறை. அதை ‘’மதம்’’ என்று நாம் குறிப்பிட்டதே இல்லை. ஆங்கிலேயர்கள் தான் அதை ‘’ஹிந்து மதம்’’ என வரையறுத்தார்கள்.

சனாதன தர்மம் நம்மோடு இரண்டறக் கலந்த நாடித் துடிப்பு. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் ஆதாரமும், சனாதனம் தான். உதாரணமாக அதிகாலை எழுவது, நடைப் பயிற்சி செய்வது, ஒரு மலரை சமர்ப்பித்து இறைவழிபாடு செய்வது எல்லாமே நமது தர்மம் தான்.

கொரோனா ஊரடங்கின் போது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய தன்னார்வலர்கள்; மக்களின் ஒருவேளை பசியையாவது போக்கவேண்டுமென்ற சமூகப் பொறுப்போடு ஆங்காங்கு உணவு தயாரித்து வழங்கியவர்கள் பூனை, நாய் போன்ற ஜீவன்களுக்கு உணவளித்த மக்கள், கொரோனாவால் இறந்த நூற்றுக்கணக்கானவர் சடலங்களுக்கு அந்திம காரியம் செய்த உயர்ந்த உள்ளம் – இவை சனாதன தர்மத்தின் உன்னதமான வெளிப்பாடு இன்றும், உயர் பதவியைத் துறந்து பசுக்கள் பராமரிப்புக்காக அர்ப்பணித்துக்கொண்ட பெரியோர், தங்கள் பணியை சேவையாகக் கருதும் பெரும் விஞ்ஞானிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் யாவரும் நமது வாழ்வியல் முறையின் வாழும் உதாரணங்கள்.

நம்மை மதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முடியாது. இனத்தால், மொழியால், உணவு, உடையால் வேறுபட்டிருந்தாலும் நாம் சனாதன தர்மத்தையே பின்பற்றுகிறோம். மனிதன் இயற்றிய சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு கண்ணுக்குத் தெரியாத தர்மம் ஒன்று உள்ளது. அதை நாம் உணர்ந்தாலே வாழ்க்கை சீராகச் செல்லும். அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் கண்ணன் போன்ற அவதாரத்தினால் தர்மம் இயற்கையாகவே சரி செய்து கொள்ளும். நம் சனாதன தர்மம் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவத்தைக் கொண்டது.

மனிதர்களில் பாகுபாடு இல்லை. எப்போதும் சத்தியத்தை பேசவேண்டும், தர்ம வழியில் நடக்கவேண்டும் என்பதுதான் போதிக்கப்படுகிறது. எண்ணற்ற மன்னர்களும், மகான்களும் தங்கள் உயிரைக் கொடுத்து சனாதன தர்மத்தைக் காப்பாற்றினர். ‘பாரதம் ஒன்றே’ என்ற கருத்தியல் நிலவியதால் தான் பாரதத்தைக் காக்க துருக்கியரையும், அரேபியரையும் சுமார் அறுநூறாண்டு காலம் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் லலித் ஆதித்ய உள்ளிட்ட காஷ்மீர மன்னர்கள். அவர்கள் காஷ்மீருக்காகப் போராடவில்லை.

அதே போல் தான் டச்சுக்காரனை விரட்டியடித்தார், ராஜா மார்த்தாண்ட வர்மா. சோழப் பேரரசர்கள் பாரதப் பண்பாட்டையும், சனாதன தர்மத்தையும் கிழக்கு ஆசியப் பகுதிகள் வரை கொண்டுச் சென்றனர்.

வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து பகுதிகளில் ராம கதை இப்போதும் பாடப்படுகிறது. ராமாயணத்திலிருந்து ஸ்லோகங்கள் ஓதிய பிறகே தாய்லாந்து மன்னர் முடிசூடுகிறார். சனாதனத்தை நிலைநாட்ட ஆதிசங்கரர் நான்கு முறை பாரதத்தை வலம் வந்தார். பிற மதத்தினருடன் அவர் தர்க்கத்தில் ஈடுபட்டது அவர்களை வெல்ல அல்ல, சனாதனம் என்னவென்று புரிய வைக்க. இன்றைய தலைமுறையினர் இந்த வரலாற்றையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அணு ஆயுதத்தின் தந்தை என அறியப்படும் ஓபன்ஹெய்மர் அணுகுண்டு தயாரிப்பது நன்மையா, தீமையா என பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவருக்கு வழிகாட்டியது பகவத் கீதை தான். கடமை, சேவை, வேலை இவற்றின் வேறுபாடுகளை அறிதல், தன்னலம் கருதாது பொதுநலனுக்காக உழைத்தல், நம் செயல்களின் பலனை இறைவனுக்களித்தல் என நாம் வாழ்ந்து காட்டினால் நாம் தான் விஸ்வகுரு. உலகிற்கே வழிகாட்டி.

வெறும் பொருளாதார முன்னேற்றத்தால் மட்டும் விஸ்வகுருவாகிவிட முடியாது. சனாதன தர்மத்தை நாம் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் தான், ராம ராஜ்ஜியம் மலரும் உலகம் நம்மைப் பின்பற்றும். உலகில் நான்காவது பெரிய மதம் ஹிந்து மதம். பதினோரு தேசங்களில் மட்டுமே பரவியுள்ளது

அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இஸ்லாம் பெரிய மதமாகவும், கிறிஸ்தவம் இரண்டாவது இடத்திற்கும் போய்விடும். மூன்றாவதாக மத நம்பிக்கையற்றோர். இத்தகைய சூழலில் சனாதனத்தைக் காக்க பாரதம் தான் வழிகாட்ட வேண்டும். பிற மதத்தவரும் நம் சனாதன தர்ம சிந்தனைகளை பின்பற்றும் விதமாக பாரதம் செயலாற்ற வேண்டும்.

சுருக்கமாக

உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் பாரதத்தின் பங்கு மிக இன்றியமையாதது. இதையெல்லாம் இன்றைய இளைஞர் சக்தி மனதில் கொள்ள வேண்டும்.
− பெங்களூரில் நடந்த ஒரு கலை, ஆன்மீக விழாவில் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்த்திய சிறப்புரையிலிருந்து…

நன்றி: ப்ரியா ராம்குமார்