உலகக்கோப்பை பெண்கள் சதுரங்கப் போட்டி பாரதமே சாம்பியன்!

ஒரு சர்வதேச போட்டி நடக்கிறது. 46 நாடுகள் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டத்தில் வெற்றி தோல்வி அறிவித்த பின்தான் கோப்பை எந்த நாட்டுக்கு என்று தெரியவரும். ஆனால் சென்ற வாரம் நடந்த உலகக்கோப்பை மகளிர் சதுரங்க போட்டியில் இறுதி ஆட்டம் தொடங்கியதுமே கோப்பை பாரத நாட்டிற்கு என்று தெரிந்து போயிற்று. இவ்வாறு சதுரங்க (செஸ்) ஆட்டத்தின் சிகரத்தை தேசம் எட்டுவதற்கு வீராங்கனைகள் அனைவருக்கும் விஜயபாரதத்தின் பாராட்டுக்கள்!

ஜார்ஜியா நாட்டின் பதாமி நகரில் பெண்களுக்கான உலகக்கோப்பை சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் 46 நாடுகளிலிருந்து 107 வீராங்கனைகள் பங்கேற்றனர். லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களில் வென்று, பாரதத்தின் கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகிய இரு வீராங்கனைகள் இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

சதுரங்க விளையாட்டை உருவாக்கிய நாடு என்ற பெருமை பாரதத்திற்குரியது என்றாலும், அந்த விளையாட்டில் பெரும் சாதனைகளைப் புரிந்தவர்கள் எல்லாம் வெளிநாட்டினர். பாரதத்தின் விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும்கூட, இதில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் ரஷ்யா, சீனா, உக்ரைன் போன்ற வெளிநாட்டைச் சார்ந்தவர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த விளையாட்டில் பாரதமும் மிகப் பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் ஆண்களிலும் பெண்களிலும் பலர் இடம் பெற்றுள்ளனர். குகேஷ் தொம்மராஜு, பிரக்யானந்தா, வைசாலி, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் என நட்சத்திரங்களின் பட்டியல் நீள்கிறது. இது பாரத விளையாட்டுத் துறையின் மிகப் பெரிய பாய்ச்சலுக்குச் சான்றாகும்.

இன்று உலகின் டாப் 10 வீரர்களின் பட்டியலில் பாரதத்தின் அர்ஜுன் எரிக்சி, குகேஷ் தொம்மராஜு, பிரக்யானந்தா, அரவிந்த் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாக்அவுட் முறையிலான இத்தொடரின் அரையிறுதியில் உலகத்தர வரிசையில் 18வது இடத்திலுள்ள பாரத வீராங்கனை திவ்யா தேஷ்முக், சீனாவின் ஜோங்இயை 15 – 5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இவரைத் தவிர உலகின் முன்னணி டாப் 10 வரிசையில் இடம் பெற்றுள்ள மூவரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு இறுதிப்போட்டி வீராங்கனையான கோனேரு ஹம்பி அரையிறுதியில் டைபிரேக்கர் வரை சென்று 5 – 0, 3 – 0 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் 3வது தர வரிசை வீராங்கனையான சீனாவின் லேய் டிங்ஜியை வென்றார்.  இதையடுத்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தனர்.

உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் பாரத நாட்டு வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் நிகழ்வு இதுவே முதல் முறையாகும். பாரதத்தின் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் இந்தப் பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள். இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட் சாம்பியன்ஷிப் போட்டியின் நடப்புச் சாம்பியனான சீனாவின் வென்ஜூன் ஜூவுக்கு எதிராகப் போட்டியிடுபவர் தேர்வு செய்யப்படுவார்.

ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி அரையிறுதியில் பின்தங்கியிருந்த நிலையில் சீனாவின் டிங்ஜிலீயைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு வீரரான நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக், முன்னாள் உலகச் சாம்பியனான சீனாவின் ஸோங்கிடானை வீழ்த்தியுள்ளார்.

சக நாட்டு வீராங்கனைகளான இருவரில் யார் வென்றாலும், அது நமது நாட்டின் வெற்றியாக அமையும். இது குறித்து கோனேரு ஹம்பி கூறுகையில், சதுரங்க ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும். ஏனென்றால், இப்போது சாம்பியன் பட்டம் பாரதத்திற்கு நிச்சயம் வரும். அதனால் இறுதிப்போட்டி மிகவும் கடினமாகவும் இருக்கும். திவ்யா தேஷ்முக் இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

இறுதிப்போட்டி இரு கிளாசிக் ஆட்டங்களைக் கொண்டது. ஒருவேளை  1 -1 என டிராவில் முடிவடைந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படும். முடிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.43.24 லட்சம் பரிசுத் தொகையினைப் பெறுவார். இரண்டாமிடத்தைப் பெறுபவர் ரூ.30.26 லட்சம் பரிசுத் தொகையைப் பெறுவார்.             F

 

திவ்யா தேஷ்முக்

நாக்பூரைச் சேர்ந்த மருத்துவர்களான  ஜிதேந்திர தேஷ்முக் மற்றும் நம்ரதா தேஷ்முக்  மகள் திவ்யா தேஷ்முக். 2021ல், பாரதத்தின் 21வது பெண் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆனார். 2022ல் பெண்கள் பாரத சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.

2025 மகளிர் சதுரங்க உலகக் கோப்பை போட்டியின், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய  நிலையில், அவர் நான்காவது சுற்றில் ஜினரை (2வது நிலை வீராங்கனை), காலிறுதியில் ஹரிகா துரோணவல்லியை (10வது நிலை வீராங்கனை) மற்றும் அரையிறுதியில் டான் ஜோங்கியை (3வது நிலை வீராங்கனை) தோற்கடித்தார்.

கோனேரு ஹம்பி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச்  சேர்ந்த  பாரத சதுரங்க வீராங்கனை கோனேரு ஹம்பி, சதுரங்க விளையாட்டின் அதிரடி ஆட்ட வகை பிரிவில் உலக சாம்பியன் ஆவார். இவரது பெற்றோர் கோனேரு அசோக் – கோனேரு லதா.  2002 ஆம் ஆண்டு, தனது  15 வயதில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, உலக சதுரங்க வரலாற்றில், மிக இளம் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். 2006ல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாரதத்தின் சார்பாக, தனிநபர் மற்றும் கலப்புப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஜூலை 2025 பிடே  மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதியில், லீ டிங்ஜியை 5-3 என்ற கணக்கில் தோற்கடித்து, 19 வயது சகநாட்டவரான திவ்யா தேஷ்முக்குடன் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்