தமிழகத்தில் ஒரு ‘ஜாலியன் வாலாபாக்’ !

 

பாரதத்தின் சுதந்திர எழுச்சிப் போராட்டத்தில், வடக்கே அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் அப்பாவிகள், சாதுக்கள் மீது பிரிட்டிஷார் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவம், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடெங்கும் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தது. அதற்கு இணையான ஒரு சம்பவம், தென்னகத்தில் நடந்தது. இந்தச் சம்பவத்தால் பரவிய போராட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் பிரிட்டிஷார் வெளியேற மேலும் ஒரு காரணமானது. எனவே அந்தச் சம்பவம், ‘தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக்’ என்று வரலாற்றில் பதிவானது!

தென் பாரதத்தின் சுதந்திர எழுச்சிக் கனல் கோட்டையாக விளங்கிய சிவகங்கை மண்ணில் இருந்தது, தெய்வங்களின் கோட்டை என்ற பொருள்பட அமைந்த தேவிக்கோட்டை. இங்குள்ள சிவன் கோயில், இதன் தொன்மையைச் சொல்லும். இப்பெயர் மருவி தேவகோட்டையாக அறியப்பட்டு, ‘தேசபக்தர்களின் கோட்டை’யாயிற்று! அதற்கு வித்திட்டது 1942ல் நடந்த ஆகஸ்ட் புரட்சி என்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்!

1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’  இயக்கம் தீவிரம் அடைந்து இருந்தது.  தேசத் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். அதனால், நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. அது, தென்னகத்தில் பரவி, தேவகோட்டை
யிலும் ஊரடங்கு உத்தரவு அமலானது. எனினும், அதை சிறிதும் மதிக்காமல், பொதுமக்கள் பெருமளவில் கூடி போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

1942 ஆகஸ்ட் 16ல், புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ராமநாதன், சின்ன அண்ணாமலை உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டு,  திருவாடனை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இச்செய்தி சுற்றியுள்ள ஊர்களிலும் பரவியது. அடுத்த நாளே தேவகோட்டையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள், தியாகிகளை சிறைப்பிடித்த இன்ஸ்பெக்டர் குருசாமி, சங்கரன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். பின் அவர்களைப் பிடித்து, தேவகோட்டை பூங்கா ரேடியோ அறையில் அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சங்கரன், இன்ஸ்பெக்டர் குருசாமி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதாக, தவறான தகவலை காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த காவல் அதிகாரிகள், போராட்டக்காரர்களை அடக்க ஒரு போலீஸ் குழுவை அனுப்பி வைத்தனர்.

அதே நேரம், கோர்ட் முன் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தைக் கலைக்க காலை 10 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி போலீஸார் கண்மூடித் தனமாக சுட்டனர். இதில், தர்மராஜன் (21) என்பவர் காயமடைந்து சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அடுத்து கிருஷ்ணன் (18) என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். போராட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத மூதாட்டி ஒருவரும் சுடப்பட்டார். காயம் பட்டவர் தண்ணீர்த் தாகத்தால் தவித்த போது, நீர் எடுத்துக் கொடுக்கச் சென்ற சிறுவனும் சுடப்பட,  இதைக் கண்டு மக்கள் ஆத்திரம் அடைந்தனர். போலீஸார் தாக்குதலுக்கு ஆளாகினர்.

மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்த போலீஸார் ஓட்டம் பிடிக்க, அந்த மக்கள் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குள் புகுந்து தீ வைத்தனர். அப்படியே திருவாடானை சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டது. அங்கே சிறையில் வைக்கப்பட்டிருந்த சின்ன அண்ணாமலை, டி.எஸ். ராமநாதன் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையில் இருந்து வெளியே கொண்டு வரப்
பட்டனர். சிறை சூறையாடப்பட்டது.  தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் எல்லாம் ஒரே களேபரம்.

கோர்ட்டை எரித்தவர்களால், போலீஸ் ஸ்டேஷனும் தீக்கிரையாகும் எனக் கருதிய போலீஸ் அதிகாரிகள், காட்டு வழியே சைக்கிளில் ‘செட்டிநாடு’க்கு நபர்களை அனுப்பி, அங்கே காத்திருந்த ராணுவ வீரர்களை வரவழைத்தனர். ஊருக்குள் வந்த ராணுவம், தேவகோட்டை நகரின் நுழைவு வாயிலான ஆர்ச் அருகே நின்றிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் நாடெங்கும் பரவியது, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் புரட்சியில் தன் மண்ணின் மக்கள் பலரைக் காவு கொடுத்த தேவகோட்டையில், பின்னாளில் தியாகிகள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்பட்டது. தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை நினைவுகூர தியாகிகள் பூங்கா அமைக்கப்பட்டது. அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கொளுத்தப்பட்ட கோர்ட் ரோடு,  தியாகிகள் ரோடு என்று பெயர் மாற்றம் கண்டது.

அன்று நடந்த சம்பவங்களைப் பற்றி ‘சொன்னால் நம்ப
மாட்டீர்கள்’ எனும் நூலில் சின்ன அண்ணாமலை பின்வருமாறு பதிவு செய்தார்…

“1942 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக் கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி, மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

இரவு மணி 7 ஆயிற்று. இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள், கல், இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். மயக்கமாக இருந்தது. அதேஇடத்தில் கீழே ‘தடால்’ என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப்படுத்து விட்டார்.

மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம். தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதற்கு முன்தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்?  நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?      F