தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள ஜூன் 22 மதுரை முருக மாநாடு பற்றி ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் ஆர்.வன்னியராஜன் தெரிவித்துள்ள கருத்து.
தமிழ்நாடு கலாச்சார ரீதியாக செழுமையான, தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆன்மிக பூமியில் ஹிந்து விரோத சக்திகளும், பிரிவினை, பிளவுவாத தீய சக்திகளும் மக்களை சனாதன பண்புகளிலிருந்து துண்டிக்க பல பத்தாண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. ஹிந்து பாரம்பரியத்தை, ஆலயங்களை, மரபுகளை எந்த தீய சக்தியாலும் குந்தகப்படுத்த முடியாது. எனினும் இந்த தீய சக்திகள் நமக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வந்தன. இப்போதும் இதே பாதையில்தான் பயணிக்கின்றன. புனிதத் தலங்களை சீர்குலைக்க வேண்டும், ஆன்மிக அமைப்புகளை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் தீய சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ள மலையை இஸ்லாமியர்கள் தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வக்பு சொத்து என்று பகிரங்கமாக பொய் தகவலைக் கூறினார்கள். இதைப்போல ஹிந்து விரோத நடவடிக்கைகளை அடுக்கடுக்காக அரங்கேற்றினார்கள். கோயில் நிதி மடைமாற்றம் செய்யப்பட்டது. துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. சனாதன தர்மத்தை இழிவுபடுத்திப் பேசினார்கள். இதை ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ பாதிரிகளும் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது நமது கலாச்சார ஆன்மிக எழுச்சியை நிரூபித்துக் காட்டி விட்டது. எதிர்கால தமிழகம் எத்திசையில் பயணிக்கும் என்பதை இது சுட்டிக்காட்டியுள்ளது.
கலாச்சார நம்பிக்கையை தழைத்தோங்க வைக்க வேண்டும். சனாதன தர்ம பண்பாட்டை மக்களின் மனங்களில் ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பதன் பொருட்டே முருகன் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் வாயிலாக இந்த இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டு விட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹிந்து முன்னணி சார்பில் இவ்வாறு மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முருகனை மையப்படுத்தி மாநாடு நடத்தப்பட்டுள்ளது. முருகனை கடவுள் என்று சொல்வதுடன், தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் முன்னோடி என்று போற்றிப் புகழ்கிறோம். முருகனை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த மாநாடு ஆன்மிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் எத்தகைய உயரங்களைத் தொட வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உயரங்களைத் தொட்டு விட்டோம். நம் பாரம்பரியத்துடன் மக்களை வலுவாக இணைத்து விட்டோம். பிணைத்து விட்டோம்.
தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு வெறித்தனமான பேச்சு வாயிலாகவும், மோசமான நடத்தை வாயிலாகவும், சனாதன தர்மத்தை கேவலப்படுத்தி வருகிறது. தொடர்ந்து நிந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் இந்த மாநாடு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த மாநாடு வெறும் பேச்சுக்காகவோ சில நடவடிக்கைளுக்காகவோ கூட்டப்பட்டது அல்ல. உண்மையில் இது ஒரு மகத்தான இயக்கம். விருட்சத்தின் வேர்களாக உள்ள மக்களை கலாச்சாரத்துடன், ஆன்மிகத்துடன் இரண்டற இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு மனநிறைவு அளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை ஹிந்து முன்னணி முன்னின்று நடத்தியது. சங்கத்தின் மற்ற அமைப்புகளும் இதற்கு உறுதுணையாக செயல்பட்டன. ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பிற சகோதர அமைப்புகள் கடந்த மூன்று, நான்கு மாதங்களாக இதற்காக அரும்பாடுபட்டனர். மாநாட்டில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த சாதுக்களும், சன்னியாசிகளும், மடாதிபதிகளும் அருளாசி வழங்கினார்கள். இது மாநாட்டின் மாட்சியை மேலும் உயர்த்தி விட்டது.
இந்த மாநாடு அரசியல் சார்பற்றது. எந்த அரசியல் கட்சியின் சின்னமும் மாநாட்டில் இடம்பெறவில்லை. இது மக்கள் இயக்கம். தர்மத்துக்கான இயக்கம், இந்து முன்னணியின் கொடிகள் தவிர வேறு எந்த கொடிகளும் மாநாட்டில் பறக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மாநாட்டைத் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடித்தனர். பேச்சாளர்கள் காலத்தின் அருமை கருதி, கொடுக்கப்டட்ட நேரத்துக்குள் சிறப்பாக உரையாற்றினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டானர்.
மக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதைத குடும்ப விழா என்றே கூறலாம். பக்தி, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிவைய பரிமளித்தன. பக்தி நாட்டம் கொண்ட கலைஞர்களின் உரைகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் மாநாட்டை செழுமைப் படுத்தின. முருகனையும் பாரத மாதாவையும் போற்றி புகழ்ந்தார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த கஷ்டி கவசத்தைப் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள். எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மக்கள் அமைதியாக கூடினார்கள். அமைதியாகவே கலைந்து சென்றார்கள். மதுரை முருகன் மாநாட்டால் ஏற்பட்டுள்ள கலாச்சார எழுச்சி தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி