கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியைச் சேர்ந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத, சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகிய மூவரையும் பேரவைத் தலைவராக இருந்த ரமேஷ் குமார் கடந்த 25-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, அவர்கள் மூவரும் கடந்த 29-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கெளடா பாட்டீல், பி.சி. பாட்டீல், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், பசவராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க், ஆனந்த் சிங், எம்.டி.பி. நாகராஜ், சுதாகர், ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகிய 11 பேரையும், மஜத எம்எல்ஏக்களான ஏ.ஹெச்.விஸ்வநாத், கே.கோபாலையா, நாராயண கெளடா ஆகிய மூவரையும் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த 28-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்தார்.
இந்நிலையில், இவர்கள் 14 பேரும் தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.