மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஜாக்கெட் 6 குண்டுகள் வரை தடுக்கக் கூடியது. 7.62 * 64 ஆர் ஏபிஐ குண்டுகளைக் கூட இந்த ஜாக்கெட் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “இந்தகுண்டு துளைக்காத ஜாக்கெட் சண்டிகரில் உள்ள அணு ஆயுதஆராய்ச்சி பரிசோதனை முனையத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஜாக்கெட் புதிய வடிவமைப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது” என்று தெரிவித்துள்ளது. கான்பூரில் உள்ள பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி அமைப்பு இந்த ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளது. எடை குறைந்த மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும், ராணுவக் கட்டமைப்பை நவீனப்படுத்தியும் வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போதுமிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.