டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 இலக்கு என்ற தீர்மானமும், எதிர்கட்சிகளுடைய சந்தப்பவாத அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து கொண்டிருக்கிறார்கள், 3-வது முறையாக பாஜக ஆட்சி கட்டிலில் அமரவைக்க மக்கள் நினைக்கிறார்கள் என்ற மற்றொரு தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், ராமர் கோயில் கட்டியதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளுக்கு மேலும், தே.ஜ.கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்காக 100 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் சங்கல்பம் எடுத்துள்ளனர்.
கூட்டணி குறித்து நேரம் வரும் போது தெரிவிக்கிறோம். என் மண் என் மக்கள் இறுதி நாள் யாத்திரை வரும் 27-ம் தேதி பல்லடத்தில் நடக்கிறது. அன்று பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். 27, 28-ம் தேதி 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வபெருந்தகைக்கு வாழ்த்துக்கள். 2024 தேர்தல் தோல்வியை இப்போதே திருமாவளவன் ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.