அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.