‘ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களுக்கு துரோகம் ‘

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் அறிக்கை:
தமிழக சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, இஸ்லாமியராக மதம் மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, அதே இட ஒதுக்கீடு சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனே முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து ஆவன செய்யப்படும் என பதில் அளித்திருந்தார்.

சிறுபான்மை நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது.

ஓட்டு வங்கி அரசியல் லாபத்துக்காக ஹிந்துக்களுக்கு தி.மு.க., அநீதி இழைக்க தயாராக இருப்பதை ஹிந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் எந்தவொரு சிறுபான்மை பள்ளி, கல்லுாரிகளிலும், ஹிந்துக்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்குவதில்லை.

அதற்கு திராவிட அரசியல் கட்சிகள் துணை போகின்றன. ஆனால், ஹிந்துக்களுக்கான சலுகையை இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து ஹிந்துக்களுக்கு துரோகம் செய்ய, இந்த திராவிட அரசியல் கட்சிகள் தயங்குவதில்லை.

இட ஒதுக்கீடு சலுகைகளை ஹிந்துக்களிடம் இருந்து பறித்து பங்கு போட ஆலோசனைக் குழு அமைத்தால், ஹிந்து முன்னணி எதிர்த்து சட்ட போராட்டத்தை நடத்தும். திராவிட அரசியல் கட்சிகளின் சதியை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓட்டுகள் மூலம், துரோகம் செய்யத் துணிந்த திராவிட கட்சிகளை வரும் தேர்தலில் தோற்கடிக்க முன்வாருங்கள். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.