சமண துறவி வித்யாசாகர் மகராஜ் முக்தி அடைந்தார்

பிரசித்தி பெற்ற சமணத் துறவி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ், 77, உண்ணா நோன்பு கடைப்பிடித்து நேற்று முக்தி அடைந்தார்.

சத்தீஸ்கரின், ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தின் டோங்கர்கர் என்ற இடத்தில், சமண மதத்தினர் வழிபடும் சந்திரகிரி தீர்த்தம் உள்ளது. இங்கு, புகழ்பெற்ற சமணத் துறவியான ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ், கடந்த ஆறு மாதமாக தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், சல்லேக்னா எனப்படும், உண்ணா நோன்பு வாயிலாக முக்தி அடைவது ஆன்மாவை சுத்திகரிக்கும் செயலாக சமண மதத்தில் கருதப்படுகிறது. இந்த சல்லேக்னா வாயிலாக முக்தி அடைய வித்யாசாகர் மகராஜ் முடிவு செய்தார். எனவே, கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு, தண்ணீர் அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2:35 மணிக்கு அவர் முக்தி அடைந்தார். பக்தர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வித்யாசாகர் மகராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்தனர். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த ஆண்டு நவம்பரில் வந்த பிரதமர் மோடி, ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.