முதலாம் நூற்றாண்டில் தென்கொரியாவில் காராக் மன்னராட்சி நடைபெற்றது. அப்போது இந்தியாவின் உ.பி. அயோத்தியை சேர்ந்த இளவரசி சூரி ரத்னாவை, காராக் குலத்தின் மன்னர் கிம் சுரோ திருமணம் செய்தார். இதன்பிறகு இளவரசி சூரி ரத்னாவின் பெயர் ஹூ ஹ்வாங் ஓக் என்று மாற்றப்பட்டது.
தென்கொரிய மக்கள் தொகை 5.17 கோடி. இதில் சுமார் 1.5 கோடி பேர் காராக் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அயோத்தி இளவரசிசூரி ரத்னாவின் வாரிசுகளாக அறியப்படும் இவர்கள், இந்தியா மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான தென் கொரிய மக்கள் அயோத்திக்கு சுற்றுலா வருகின்றனர்.
அயோத்தியின் சரயு நதிக் கரையில் அயோத்தி இளவரசியும் தென்கொரிய ராணியுமான சூரி ரத்னாவுக்கு நினைவு சின்னம் உள்ளது. இந்த சூழலில் இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் தென்கொரியாவின் காராக் மன்னர் குடும்பத்தை சேர்ந்த வாரிசு கிம் சூல் பங்கேற்கிறார். அவர் கூறும்போது, “இந்தியா, தென்கொரியாவை இணைக்கும் பாலமாக அயோத்தி இளவரசி சூரி ரத்னா விளங்குகிறார். ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு காராக் மன்னர் பரம்பரையை சேர்ந்த தென்கொரிய மக்கள் பெருமளவில் அயோத்திக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது