இந்திய ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் – சிகிச்சை தாமதத்தால் சிறுவன் உயிரிழப்பு

மாலத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனை இந்திய ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல அனுமதி வழங்க அந்நாட்டு அதிபர் முய்ஸு தாமதித்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்ததாவது: காஃபு அட்டோலைச் சேர்ந்த 13 வயது சிறுவனக்கு உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, இந்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறுவனை மாலேவில் உள்ள உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு மிகவும் தாமதம் காட்டியுள்ளது.

இதையடுத்து, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்லமுடியாததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசின் தாமதமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகமதுகசான் எக்ஸ் தளத்தில் கூறிய பதிலில் “மருத்துவ உதவிகளுக்கு 93 சதவீதம் மாலத்தீவு விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவசர கால மருத்துவ நடைமுறைகளுக்கு அதிபரின் அனுமதி பெறவோ அல்லது அவருக்கு தகவல் தெரிவிக்கவோ தேவையில்லை என்பது விதி. மாறாக அந்தப் பணியானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை சார்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. சீனா ஆதரவாளராக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அங்கிருக்கும் இந்திய அதிகாரிகளை மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேறுமாறு கெடு விதித்துள்ளார். இந்த நிலையில், இந்திய ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பயன்பாட்டையும் அதிபர் தவிர்ப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவற்றின் பயன்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.