மத்திய பிரதேசத்தில், சட்ட விரோதமாக இயங்கி வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமியர் காணாமல் போன நிலையில், அவர்களை போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர். அங்கு வசிக்கும் சிறுமியர் கிறிஸ்துவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு போபாலின் புறநகர் பகுதியான பர்வாலியாவில் ஆன்சல் என்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 4ம் தேதி, இக்காப்பகத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் தலைவர் பிரியங்க் கனுங்கோ திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்தபோது, மொத்தம் உள்ள 68 சிறுமியரில் 26 பேர் காணாமல் போனது தெரியவந்தது.
அவர்கள் அனைவரும் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விடுதி இயக்குனர் அனில் மேத்யூவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, உள்ளூர் போலீசில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த காப்பகம் சட்டவிரோதமாக இயங்கி வந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, காணாமல் போன சிறுமியரை, தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டனர். இதில் ஆதம்பூர் சாவ்னி பகுதியில் 10 சிறுமியரும், அங்குள்ள குடிசைப் பகுதியில் 13 சிறுமியரும், டாப் நகரில் இரண்டு சிறுமியரும், ரெய்சன் பகுதியில் ஒரு சிறுமி என மொத்தம் 26 பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, இவ்விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களான பிரேஜேந்திர பிரதாப் சிங் மற்றும் கோமால் உபாத்யாய் ஆகிய இருவரை, மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இதுதவிர மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அளித்த புகாரில், இக்காப்பகத்தில், 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் தங்கியிருந்த நிலையில், கிறிஸ்துவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சிகளும் அரங்கேறுவதாக குற்றஞ்சாட்டியது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.