‘ஒன்று கூடி பயணித்தால் தான் இந்தியா வளர்ந்த நாடாகும்’

”அனைவரும் ஒன்றுகூடி பயணித்தால்தான், இந்தியா வளர்ந்த, வலிமையான நாடாககும்,” என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். சென்னை பெரவள்ளூரில், ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தலைப்பிலான, பிரசார யாத்ராவை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதித்யா விண்கல சாதனையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியும் உள்ளார். ஏழை குடும்பத்தில் இருந்து பிரதமர் மோடி வந்துள்ளார். அதனால் அவருக்கு, ஏழைகள் கஷ்டம் நன்கு தெரியும்.

மத்திய அரசின் எல்லா திட்டங்களும் ஏழை, எளிய மக்கள் வரை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் தரப்படுகிறது. பிரதமரும் சாலையோரம் டீக்கடை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டம், உணவு தானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றால், இந்தியா முழுதும் 80 கோடி பேர் பயனடைந்துள்ளனர். பயன் அடைந்தோர், மற்றவர்களையும் திட்டத்தில் பயன்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் வளர்ச்சி அடைந்தால்தான், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகவும், வலிமையான நாடாகவும் மாறும். வரும், 2047ம் ஆண்டு வரை, அனைவரும் ஒன்றுகூடி பயணிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், நம் பாரதத்தை வளர்ச்சி அடைய வைக்க முடியும். தமிழகத்தில், 3.6 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இலவச சமையல் எரிவாயு ‘உஜ்வாலா திட்டம்’ 100 சதவீத மக்களை சென்றடைய வேண்டும். அதைத்தான் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் விரும்புகிறோம். இந்த விஷயத்தில், மாநில அரசு எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

அதனால்தான், மத்திய அரசே நேரடியாக களம் இறங்கி இருக்கிறது. திட்டத்தை கையில் எடுத்து, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைய வைக்கும் பணியை மத்திய அரசு செய்கிறது. மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டமும் பெரும்பாலானவர்களை சென்றடையவில்லை. அதை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு பியுஷ்கோயல் பேசினார்.