நாடு முழுதும் உள்ள அனைத்து கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும், தனித்துவமான அடையாளத்தை கட்டாயமாக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் ஆர்த்தி அஹுஜா கூறியதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த, நாடு முழுதும் உள்ள அனைத்து கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும், தனித்துவமான அடையாளத்தை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அடையாளம் காட்டியை, ஆதாருடன் இணைத்து, இ-ஷ்ரம் தரவு தளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இது புலம்பெயரும் தொழிலாளர்கள் நாடு முழுதும் எங்கிருந்தாலும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற உதவும். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பில் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படும். ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பதிவு செய்யப்படாத அவுட்சோர்சிங் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆகவே, ஒப்பந்ததாரர்கள், அரசின் நான்கு முக்கிய விதிமுறைகளான, குறைந்தபட்ச ஊதியம், தொழில் பாதுகாப்பு, குழந்தைகள் காப்பகம், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய அளவிலான தங்குமிடம், சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.