கூடுதல் நிதி பாதுகாப்பு வழங்கும் எல்.ஐ.சி.,யின் ஜீவன் உத்சவ்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘எல்.ஐ.சி.,’ உத்தரவாதமாக பணத்தை அளிக்கும் ‘ஜீவன் உத்சவ்’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஒரு தனி நபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 90 நாட்கள் முதல், 65 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம். மேலும், ஆயுள் முழுதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுதும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகளாகவும்; அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம், 16 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பின் பாலிசி தாரர், சீரான வருமான பலன், விருப்ப வருமான பலன், இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஒத்திவைப்பு காலமான, மூன்று முதல் ஆறு ஆண்டுகள் கழித்து அடிப்படை ஆயுள் காப்பீட்டு தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும்.

ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவில் வழங்கப்படும் 10 சதவீத ஆயுள் காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெறாமல், அதனை மொத்தமாக பின்னர் பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு. அத்தகைய சூழலில், பாலிசிதாரர் அதை எப்போது பெறுகிறாரோ அதுவரை, ஆண்டுக்கு 5.50 சதவீதம் கூட்டு வட்டியும் அளிக்கப்படுகிறது.

காப்பீட்டு பாதுகாப்பு துவங்கப்பட்ட பின், பாலிசி நடப்பில் இருந்தால், பாலிசிதாரர் இறப்பின் போது உறுதியளிப்புத் தொகையுடன் சேர்த்து, இறப்பு காப்பீட்டுத் தொகையும் அளிக்கப்படும். இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105 சதவீதத்துக்கும் குறையாமல், இறப்பு பலன் வழங்கப்படுகிறது. ‘அடிப்படை காப்பீட்டுத்தொகை’ அல்லது ‘ஆண்டு பிரீமியத்தின் ஏழு மடங்கு’, இவற்றில் எது அதிகமோ அது இறப்பு காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.