தமிழகத்தில் பரவலாக உள்ள வைரஸ் தன்மை, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துப் போகிறது என, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், டெங்கு, ப்ளூ, நிமோனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேசியதாவது:
சீனாவில் பரவும் வைரஸ், ‘ஹெச்9என்௨ இன்ப்ளூயன்ஸா’ துணை வகையை சார்ந்த வைரஸ் ஆக உள்ளது. அதன் பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் போல உள்ளது. இவ்வகை வைரசின் தன்மை, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துப் போகிறது. இவை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேநேரம், சீனாவில் இருந்து தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வைரஸ் தன்மைகளில், மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனுவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.