பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் அறநிலையத்துறை இருக்காது

”தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகம் இருக்காது,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். நுாறாவது தொகுதியாக நேற்று மாலை, திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் பகுதியில் இருந்து, அண்ணாமலை நடைபயணத்தை துவக்கினார். அவர் பேசியதாவது:

தமிழக அரசியல்வாதிகள் சனாதனதர்மத்தை ஒழித்து விடுவோம் என்று பேசுகின்றனர். மொகலாய மன்னர்களால் ஒழித்துக் கட்ட முடியாத சனாதன தர்மத்தை, தி.மு.க., ஒழித்துக்கட்டி விடுமா. மொத்தம் 12 ஆயிரம் வைணவர்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய சனாதன தர்மத்தை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முடிவு கட்டியவுடன், 1801 ஜூன் 16ம் தேதி, ஜம்பு தீவு பிரகடனத்தை, ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவரில் ஒட்டி, ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.

வீரம் மிக்க மண்ணில் மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனத்தில் கடைசி வரியில், ‘தொண்டு ஊழியம் செய்து, சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால், அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். மீசை வைத்த அனைவருக்கும் வீரம் இருந்தால், இந்த ஈனர்களை அழித்து விட வேண்டும். ஈனர்களுக்கு தொண்டு ஊழியம் செய்பவர்களுக்கு மோட்சம் கிடையாது. அயோக்கிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அதே போல், தீய சக்தியான தி.மு.க.,வை எதிர்த்து நாம் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இந்த ஸ்ரீரங்கத்தில் இருந்து உறுதியெடுக்கிறேன்… தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு கோவில்கள் முன், ‘கடவுள் இல்லை’ என்று எழுதி வைத்திருப்பது அப்புறப்படுத்தப்படும். பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகமும் இருக்காது. இது, என் மண், என் மக்கள் நடைபயணத்தின் பிரகடனம்.

இவ்வாறு அவர் பேசினார்.