பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்காவையும் கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து ஜமா அத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில், உக்கடத்தில், 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, இந்திய அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது, சிலர் உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஏறி, தடுப்புச் சுவரில் பாலஸ்தீன கொடியை தொங்க விட்டு, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், அவர்கள் அங்கிருந்து கலைந்தனர். பாதுகாப்புக்கு வந்த எஸ்.ஐ., ரேணுகாதேவி, இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.
ஜமா அத் இஸ்லாமிக் ஹிந்த் மாவட்ட செயலர் சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அபுதாகிர் மற்றும் ரபீக் உட்பட சிலர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உட்பட மூன்று பிரிவில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.