வனவாசி உரிமைக்காக தியாகம் செய்த பாபுராவ்

இன்றைய மகாராஷ்டிரவில் வனவாசியினர் அதிகமாக இருந்த பகுதியில் அவ்வின இளைஞர்களின் துணை கொண்டு பிரிட்டிஷாரை விரட்டியடித்தார் பாபுராவ் ஷெட்மேக். அவரை பிடித்து தூக்கிலிட்ட போதிலும் அவர் மூட்டிய கலக கனல் அணையவில்லை.

1857 ல் கொடுங்கோன்மையான பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திர அலை வீசியது. நாட்டின் எல்லா பகுதியிலும் மக்கள் தங்களுக்கே உரிய வகையில் அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தனர். ஆதிவாசிகள் எனப்படும் வனவாசிகளும் இந்த விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் ஏதோச்சதிகாரத்தால் அவர்களது வாழ்க்கை முறையும்  பரம்பரையான நிலங்களின் மீதான உரிமையும் பறிபோயிருந்தது.

ஆத்திரம் ஆர்ப்பாட்டமானது

பாபுராவ்  ஷெட்மேக் என்ற பெரும் புரட்சியாளர் சந்திராபூரை   (இன்றைய மகாராஷ்டிரவில் உள்ள பகுதி) சேர்ந்தவர். 1854ல் அந்த பகுதி பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வந்தது. ஏகாதியபத்திய, அநியாயமான, வெகுஜனங்களின் இயல்பான வாழ்க்கையை நசுக்கக்கூடிய பிரிட்டிஷ் ஆட்சியை சுமார் 500 வனவாசி இளைஞர்கள் படையை திரட்டி பாபுராவ் எதிர்த்தார்.

அவர் தம் இளம் வயதிலேயே நில உடைமையாளர்களாக இருந்த ஜமீன்தார்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள் பொதுமக்களை கசக்கி பிழிந்து கொடுமைப்படுத்தியதை கண்டவர். அது அவருடைய மனதில் அந்த ஆட்சி முறையை பற்றி ஆழமான பதிவுகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. பாரதத்தில் பிரிட்டிஷார் தங்கள் பேரரசை நிறுவிய போது சாதாரண மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அதை கண்ட பாபுராவ் ஷெட்மேக்கின் ஆத்திரம் ஆர்ப்பாட்டமாக  வெளிப்பட்டது.

மதமாற்றத்தை எதிர்த்தது

பிரிட்டிஷார் பாரதத்துக்கு வருவதற்கு முன்பு சந்திராபூர் மாவட்டத்தில் பிரதான், ஹால்பி, கோண்ட், மடியா போன்ற வனவாசிகள் வாழ்ந்து வந்தனர். 1854ல் சந்திராபூர் பகுதிக்கு புதிய கலெக்டரை பிரிட்டிஷார்  நியமித்து அந்த பகுதியில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தினார். அத்துடன் கிறிஸ்தவ மிஷனரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மிஷனரிகள் வளர்ச்சி என்ற பெயரில் வனவாசிகளை மதம் மாற வற்புறுத்தியது.

பிரிட்டிஷார் அந்த பகுதியில் இருந்த காடுகளை அழித்தனர். இயற்கை வளங்களை சுரண்டினர். இதனால் வனவாசிகளின் வாழ்க்கை முறையும் அவர்களது பண்பாடும் பாதிக்கப்பட்டது. சந்திராபூரில் அரச வம்சத்தில் பிறந்த பாபுரா ஷெட்மேக் பெரிதும் அதிருப்தி அடைந்தார். பிரிட்டிஷார் வனவாசி மக்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவதைக் கண்டு ஆத்திரம் அடைந்தார்.

விக்டோரியா மகாராணி ஆத்திரப்பட்டாள்

பிரிட்டிஷாரை எதிர்க்க சங்கோம் சேனா என்ற அமைப்பை பாபுராவ்  ஷெட்மேக் ஏற்படுத்தினார். காட், அடாபள்ளி போன்ற கிராமங்களில் இருந்து வனவாசி இளைஞர்களை திரட்டி, அவர்களுக்கு கொரில்லா போர் முறைக்கு பயிற்சி அளித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த ராஜகாட்டை  தாக்கியதன் மூலம் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

ஷெட்மேக் தனது வனவாசி படையை கொண்டு ராஜ்காட்டை தாக்கிய போது பிரிட்டிஷ் ராணுவம் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. சங்கோம் சேனா பிரிட்டிஷாரின் தொலைபேசி மையத்தை தாக்கிய போது இரண்டு பிரிட்டிஷ் தொலைபேசி துறை வல்லுனர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது தகவல் பரிமாற்ற முறை பாதிக்கப்பட்டது. இது விக்டோரியா மகாராணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஷெட்மேக்கின் தீரமும் அதனால் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் கண்டு அவள் ஆத்திரப்பட்டாள்.

எப்படியாவது ஷெட்மேக்கை கைது செய்ய உத்தரவிட்டாள். பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டது. ஆனால் பலமுறை முயன்றும் பாபுராவை கைது செய்ய முடியாமல் போனது மட்டுமின்றி, தோல்வி கண்டும் திரும்பியது. அதனால் அவமானப்பட்ட பிரிட்டிஷார் சதி செயலில் ஈடுபட்டனர்.

பாபுராவை கைது செய்ய அவர்கள் சதி திட்டம்  தீட்டினர். பாபுராவை பிடிக்காத அஹிரி பகுதி ஜமீன்தார் அட்யா லட்சுமிபாயிடம் தஞ்சம் புகுந்தனர். பிரிட்டிஷாரின் புகழுரைகளையும் பரிசுகளையும் கண்டு மயங்கிய அவர் ஷெட்மேக்கை  கைது செய்ய உதவுவதாக வாக்குறுதி அளித்தார்.  அவர்களது சதி திட்டத்தால் 1858 செப்டம்பர் 16 அன்று பாபுராவ் ஷெட்மேக்கை  பிரிட்டிஷார் கைது செய்தனர்.

 மரணத்தை தழுவினார்

பிடிபட்ட பாபுராவ் ஷெட்மேக்  சந்திராபூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் சவாலாக இருந்த அவரைக் கண்டு அவர்கள் பெரிதும் அச்சமுற்றனர். எனவே உடனடியாக இரண்டே நாளில் 1858 செப்டம்பர் 18 அன்று சந்திராபூர் சிறை வளாகத்தில் இருந்த அரச மரத்தில்  தூக்கிலிட்டனர். அவரது தைரியமும் தீரமும் பல விடுதலை போராளிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக, பாரத விடுதலைப் போரில் மேலும் தீவிரமாக ஈடுபட வைப்பதாக இருந்தது.

பாபுராவின் தூக்கு தண்டனை வனவாசி மக்களின் நெஞ்சில் இருந்த கிளர்ச்சி கனலை அணைக்கவில்லை. மாறாக அது கொழுந்துவிட்டு எரிந்து, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. அவர்கள் மேலும் பல கிளர்ச்சி குழுக்களை ஏற்படுத்தினர். வனவாசிகளின் உரிமைகளுக்காக பிரிட்டிஷாரை எதிர்த்து தைரியமாக போராடினார்கள்.

பாபுராவ் ஷெட்மேக்கின் தியாகத்தால் ஊக்கம் பெற்றவர்கள் பல விவசாய சங்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்தனர். அந்த விவசாய சங்கங்கள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. நாடு முழுவதும் விவசாயிகளும் பயிர் தொழிலாளர்களும் சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்த முக்கிய பங்கு நினைவுகூரத்தக்கது.

வனவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய புரட்சியாளராகவும் அவர்களது வீரநாயகனாகவும் இன்றும் ஷெட்மேக் நினைவு கூரப்படுகிறார். ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் எல்லோருக்கும் அவர் நினைவு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் பாபுராவின் பங்களிப்பை போற்றும் விதமாக மகாராஷ்டிர மாநில அரசு சந்திராபூரில்  உள்ள மாணவர் விடுதிக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. அவரது சொந்த கிராமத்தில் ஒரு நினைவிடத்தை எழுப்பியுள்ளது. அவரது வாழ்க்கை மக்கள் இயக்கத்தின் வல்லமையை, எது சரியோ அதற்காக எதையும் தியாகம் செய்யும் தார்மீகத்தின் வலிமையை பறைசாற்றுவதாக உள்ளது.

தமிழில் : திருநின்றவூர் ரவிகுமார்