மதிய உணவுதிட்ட ஊழல்

மேற்கு வங்க அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஊழல், மோசடிகளின் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நீண்ட பட்டியலில் சமீபத்தில் வெளியான பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டஊழல், மமதா பானர்ஜி அரசுக்கு மேலும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் பள்ளி மாணவர்களுக்கு பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் (PM-POSHAN) திட்டத்தின் கீழ் 140.2 கோடி உணவுகள் வழங்கப்பட்டதாக அந்த மாநில அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பில் 16 கோடி மதிய உணவுகள் கணக்கில் பொய்யாக உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது மத்திய மற்றும் வங்க அரசு அதிகாரிகளின் கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில், மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சமைத்த மதிய உணவு திட்டத்தின் திட்ட இயக்குநரைக் கொண்ட ஒரு கூட்டு ஆய்வுக்குழு, கடந்த வாரத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள பல பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் சென்றது. சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைத்தவிர, தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசின் மதிய உணவுக்கான நிதியைத் திருப்புதல், உணவு தானியங்களைத் தவறாகப் பகிர்ந்தளித்தல், காலாவதியான உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு அளிக்கும் மதிய உணவில் பயன்படுத்துதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 70 சதவீதம் வரை குறைவாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை சமைப்பது உள்ளிட்ட பிற தீவிர முரண்பாடுகளையும் இக்குழு கண்டறிந்தது.

தனது மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலை மறைப்பதற்காக, இந்த கூட்டுக்குழுவின் அறிக்கையை குழுவில் உள்ள மாநிலப் பிரதிநிதியான சி.எம்.டி.எம் திட்ட இயக்குனருடன் பகிர்ந்து கொள்ளவில்லை என கூறி மேற்கு வங்க அரசு அதை எதிர்க்கிறது. “இந்த அறிக்கை குறித்து சி.எம்.டி.எம் திட்ட இயக்குனருக்கு தெரிவிக்கப்படவில்லை, அவரது கையெழுத்து கூட எடுக்கப்படவில்லை. மத்திய மாநில உறவுகளின் தீவிர மீறல் இது. இந்த அறிக்கையைப் பெற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில அரசு முடிவு செய்யும்” என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறியுள்ளார்.