கோயில் நிலத்தை மீட்கப் போராடும் ஹிந்து முன்னணி ஊதியூரில் மோசடியாக இறையிலி நிலம் களவு போவதைத் தடுத்திருக்கிறது. அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், “கோயில் நிலங்களில் விவசாயம் சேய்யும் ஏழை மக்களை ஹிந்து முன்னணி எதிர்க்கவில்லை. ஆனால், கோயில் நிலத்தை மோசடியான முறையில் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து ஏப்பமிடத் துடிக்கும் தனியார் நிறுவனத்தையே ஹிந்து முன்னணி எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில், சுயநலத்துடன் பின்னணியில் இருந்து தூண்டிவிடும் உள்ளூர்ப் பிரமுகர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்கப்போராடும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு ஹிந்து முன்னணி துணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரி 3ம் தேதி மீண்டும், கோவை கோட்ட அளவிலான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஹிந்து முன்னணி காங்கயத்தில் நடத்தி இருக்கிறது. இதில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.
(திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்கு ஊதியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் இறையிலி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பெரும்பாலும் விவசாயிகள் குத்தகைக்கு உழுது வருகின்றனர்.
இந்த நிலையில் ஊதியூர் மலையை ஒட்டி குண்டடம் சாலையில், 101 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஹட்சன் அக்ரோ பிராடக்ட் லிமிடெட் என்ற தனியார் பால் தயாரிப்பு நிறுவனம் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது.)
பல கட்டங்களாக நடைபெற்ற ஹிந்துக்களின் போராட்டம் கோயில் நிலம் பறிபோவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.