பாரதத்துக்கு அமெரிக்கா ஆதரவு

பாரதத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், அமெரிக்காவுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், “அமெரிக்கா மற்றும் பாரதம் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள், அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு அளித்த வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நட்புறவு அத்தியாவசியம் வாய்ந்தது. நாம் தற்போது நிலவும் உணவு, எரிசக்தி, சுகாதாரம், பருவநிலை நெருக்கடிகளை பற்றி பேசும்போது, அமெரிக்கா மற்றும் பாரதத்தின் நட்புறவு இல்லாமல் அதில் பணியாற்றுவது இயலாத ஒன்று. ஜப்பானின் டோக்கியோ நகரில் பிரதமர் மோடி பேசியபோது, ‘நம்பிக்கை, சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒரு நல்ல சக்திக்கான கூட்டுறவு இது’ என தெரிவித்துள்ளார். எனவே, குவாட் உச்சி மாநாட்டுக்கு பிறகு, தற்போது ஜி20 மாநாட்டுக்கான தலைமைத்துவம் என பாரதம் ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுப்பதற்கு ஆதரவளிப்பதே எங்களது விருப்பமாகும்” என்று கூறியுள்ளார்.