பாரதத்தின் 74வது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின்னர், தேசத்தின் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கும் விதமாக அணிவகுப்பு ஊர்வலம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணி வகுப்பு விழாவை காண வெளிநாட்டு தூதுவர்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொள்வர். வழக்கமாக இதில், மிக முக்கிய நபர்ககளுக்கு (வி.வி.ஜ.பி) மட்டுமே முதல்வரிசை ஒதுக்கப்படும். தற்போது அந்த நடைமுறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு விழாவில் வி.வி.ஐ.பி.களுக்கு முதல் வரிசை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, அந்த வரிசையை புதிய நாடாளுமன்ற வளாகம், கடமை பாதை உள்ளிட்டவற்றை கட்டிய மற்றும் புனரமைத்த கட்டிட தொழிலாளர்களுக்கும், ரிக்ஷா ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.