டாப் 5 நாடுகளில் பாரதமும் ஒன்று

டெல்லியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று அங்கு திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், “செயற்கை இருதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில நவீன தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்களை அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், சீனா போன்ற நாடுகளே அதிகம் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த 4 நாடுகளின் வரிசையில் சமீப காலமாக பாரதமும் இணைந்து உள்ளது. மேலும் இந்த உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் டாப் 5 நாடுகளில் நமது நாடும் இடம் பிடித்து உள்ளது. ஆனால், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இவற்றின் விலையானது பிற 4 நாடுகளின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. மேலும், உலக தரத்திலான உள்நாட்டு மருத்துவ உபகரணங்கள், வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு வரை குறைந்த விலையில் நோயாளிகளுக்கு கிடைக்க பெறும். பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ மேலாண்மையில் சுய சார்பை பிரதிபலிக்கும் வகையில் நாடு தற்போது உள்ளது” என குறிப்பிட்டார்.