சந்தேக நபர்கள் வீடுகளில் சோதனை

கோவையில் கடந்த 23ம் தேதி அதிகாலை நடந்த கார் குண்டு பயங்கரவாத முயற்சியில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். அவனுடன் இந்த சதிச்செயலில் சம்பந்தப்பட்ட 6 பேரை கைது செய்து உபா சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் கொடுத்த பட்டியல்கள், அவர்கள் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தமிழக உளவுத்துறை மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் திருவாரூர், நெல்லை, ராமநாதபுரம் என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள சாஹிப் முகமது அலி, சையது முகமது புகாரி, முகமது அலி, முகமது இப்ராஹிம் ஆகிய நால்வர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடிப்பு சம்பந்தமாக முகமது அலி உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.  இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள அந்தநான்கு பேர் வீடுகளிலும் தனித்தனியாக கராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.