தி.மு.க சேம் சைடு கோல்

வைகோ ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது, வைகோவை புகழ்ந்து பேசியது உட்பட பல்வேறு நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்து, தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தி.மு.க. துணை பொதுச் செயலாளரான சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் தனது முகநூல் பக்கத்தில்  காரசாரமாக பதிவிட்டுள்ளார். இது தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ வெட்கம் இல்லை மானம் இல்லை நடத்து ராஜா என ஆரம்பித்து, ‘2016ல் நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய ஏசிய உரைகள் ஞாபகம் வரவில்லையா, அதை உணராமல் விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா,  1993 பழனி பார்லிமென்ட் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்து ராணிப்பேட்டை சட்டசபை இடைத்தேர்தலுக்கு சென்ற கருணாநிதியின் வேனை தீயிட்டு கொளுத்தினர். தீயிட திட்டம் வகுத்து தந்தவன் ஜெ. அரசில் அன்று மந்திரி. தீயிட்டவன் எம்.எல்.ஏ. இன்று அவர்கள் இருவரும் தி.மு.க. அரசின் மந்திரிகள். ‘அழிவின் விளிம்பை நோக்கி ஜெ. வீட்டு திருமணத்தை போல மதுரையில் நடந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம், பணம் எண்ணும் மிஷினில் பணத்தை எண்ணுவதை காணும் மக்கள் என்ன நினைப்பார்கள்’ என விளாசியுள்ளார். முத்தாய்ப்பாக,  ‘லஞ்சம் இல்லாத தமிழ் நாட்டரசில் ஒரு துறையை சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கலாம்; இயலுமா என் தோழா!’ என தி.மு.க அரசில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளார்.