சீனாவின் தலைக்குமேல் கத்தி

உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி என்ஜின் என அழைக்கப்படும் நாடு சீனா. உலகில் அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சீனாவை நம்பியே இயங்கி வருகிறது என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் சீனாவின் நிதிநிலையை ஆட்டம் காணவைக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. அதை எதிர்த்து போராடுபவர்கள் மீது சீன அரசு கடுமையான நடவடிக்கையும், அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.

சமீபத்தில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இருக்கும் 6 சிறிய கிராம வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க முடியாமல் முடக்கப்பட்டது. இந்த 6 வங்கிகளில் 6 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. 4 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஊழல், முறைகேடு, நிர்வாகக் கோளாறுகளால் ஏற்பட்ட இந்த பிரச்சனை காரனமாக, தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்காகப் போராட்டத்தில் குதித்தனர் அவற்றின் வடிக்கையாளர்கள். அந்த வாடிக்கையாளர்களை ஹெனான் மாகாண அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் எப்படி அடக்கினர் என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின் கொரோனா டெஸ்ட் கோடுகளை ஹெனான் மாகாண அரசு சிவப்பாக மாற்றியது. சீனாவில் கொரோனா டெஸ்ட் கோடு என்பது மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது அவர்கள் பாதுகாப்பானவர்கள், கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் என்பதைக் காட்டும் ஒரு கட்டாய ஸ்மார்ட்போன் வசதி. இது பச்சையாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் சிவப்பாக இருந்தால் அவர்கள் எந்தப் பொது இடத்திற்கும் செல்ல முடியாது. பேருந்து, கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

இந்த வசதியை பயன்படுத்தி திட்டமிட்டே வாடிக்கையாளர்களின் கொரோனா டெஸ்ட் கோடுகள் அனைத்தையும் சிவப்பாக மாற்றியது ஹெணான் மாகாண அரசு. எனினும், பொதுமக்கள் ஹெனான் தலைநகரில் இருக்கும் பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா முன்பாக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக உள்ளூர் ரவுடிகளை ஏவி போராட்டக்காரர்களைப் காவல்துறையினர் கண் முன்பாகவே தாக்கியுள்ளனர் ஹெனான் அரசு அதிகாரிகள். இதில் பலர் படுகாயமடைந்தனர். வங்கி மோசடியில் இருக்கும் பெரும் ஊழலை மறைக்கவே வங்கி நிர்வாகம், ஹெனான் அரசு ஆகியவை போராட்டக்காரர்களைக் கலைக்க இப்படி மோசமான நடந்துக்கொண்டு உள்ளாதாகப் பேராசிரியர் மிங்க்ஸிங் பய் தெரிவித்துள்ளார்.

பொதுவாகச் சீனாவில் எந்த வங்கியாகவும் இருந்தாலும் 5,00,000 யூவானு நிகரான வைப்பு நிதிக்கு அரசும், அந்நாட்டு மத்திய வங்கியும் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் தற்போது இந்த காப்பீடு திட்டத்தின் கீழும் பணம் அளிக்கப்படவில்லை. சீனாவில் இப்படி சிறு மற்றும் நடுத்தரப் பிரிவில் மட்டும் சுமார் 4,000 வங்கிகள் உள்ளது. இவற்றில் 14 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. அவற்றிலும் ஏகப்பட்ட ஊழல்கள் முறைகேடுகள் நடந்துள்ளன. ஏற்கனவே சீன அரசு சந்தித்து வரும் ரியல் எஸ்டேட் பிரச்சனை, வெளிநாடுகளுக்கு கொடுத்துள்ள அதிகக் கடன்களால் உள்நாட்டில் நிலவும் மோசமான நிதிநிலைமை, கொரோனா பொதுமுடக்கங்கள் போன்ற பிரச்ச்கனைகளுக்கு இடையே, சிறிய வங்கிகளாக இருந்தாலும் இந்த வங்கி மோசடிகளைச் சமாளிப்பது சீன அரசுக்கு சவால்தான். மேலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் குறைந்துள்ள இந்த வேளையில் அந்த நாட்டின் ஜி.டி.பி மற்றும் கடனுக்கிடையேயான விகிதம் 264 சதவீதமாக உள்ளது. இந்தப் பிரச்சனை உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.