கேரளாவில் கடந்த ஏப்ரல் 1, 2008 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கைத்தமுக்கு பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக சி.பி.ஐ.எம் கிளைக் குழு உறுப்பினராக இருந்த விஷ்ணு படுகொலை செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
விஷ்ணுவை கொலை செய்ததாகக் கூறி இந்த வழக்கில் 13 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை அம்மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், அவர்களில் 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், எஞ்சிய ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன் அவர்களை விடுதலையும் செய்தது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இவ்வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களும் ஆதாரமும் உப்பு பெறாத விஷயங்கள். அரசு, இதில் மதிப்புள்ள எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. கொலையை உறுதிப்படுத்தும் எந்தவொரு சூழ்நிலையையும் நிரூபிக்கத் தவறிவிட்டது. சாட்சியங்கள் சற்றும் நம்பமுடியாதவை, அளிக்கப்பட்ட அடையாளங்களும் நம்பமுடியாதவை, மீட்கப்பட்டவை ஆதாரமற்றவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு பரிதாபமாகத் தவறிவிட்டது என கூறியதுடன் ஒரு கதையைபோல புனையப்பட்ட இந்த அபத்தமான வழக்குக்காக வழக்குரைஞரையும் கடுமையாக சாடினர்.
தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவரும் பிரஜ்னா பிரவா தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஜே நந்தகுமார், இது மாநிலத்தில் தற்போதைய சூழ்நிலையை விளக்கும் ஒரு உரைகல். ஒட்டுமொத்த அமைப்பும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. காவல்துறை, சி.பி.எம்மின் நிர்வாகக் கிளையைபோல செயல்படுகிறது. சி.பி.எம் தனது கட்சித் தொண்டர்களை அரசுப் படைகளில் பின்வாசல் வழியாக திணிக்கிறது. காவல்துறையில் சி.பி.எம் பிரிவைத் தக்கவைக்கும் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்துள்ளது. கேரளாவில், காங்கிரசும் சி.பி.எம் கட்சியும் காவல்துறையில் தங்கள் ஆட்களை நியமித்து தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அதனை பயன்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து, இப்போது பி.எப்.ஐ போன்ற முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களும் தங்கள் பிரிவை காவல்துறையில் கொண்டுள்ளன. காவல்துறையில் உள்ள முஸ்லிம் உளவாளிகள், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தொண்டர்களைக் கொலை செய்ய ஜிஹாதிகளுக்குத் தகவல் கொடுக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினர் மீது பொய்யாக சி.பி.எம் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சி.பி.எம் ஒருபுறம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜக. தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. மறுபுறம் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் சி.பி.எம் குற்றவாளிகள், சமரசம் செய்யப்பட்டுள்ள காவல்துறை காரணமாக சுதந்திரமாக உலவுகின்றனர். இது ஒரு அபாயகரமான சூழல். இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு மாநிலத்தில் சிவில் உரிமைகள் மற்றும் நிர்வாகத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்” என்று கூறினார்.