உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் அலிகன்ச் பகுதியில் உள்ளது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஒரு அலுவலகம். இந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துடன் தொடர்பில் உள்ளவர் முனைவர். நீல்காந்த் மணி பூஜாரி. இவரது அலைபேசியின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு நபர் மிரட்டல் செய்தி விடுத்திருந்தார். ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் என மூன்று மொழிகளில் வந்திருந்த அந்த மிரட்டலில், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, கர்நாடகம் உள்ளிட்ட 5 ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நீல்காந்த், லக்னோ காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தீவிர விசாரணயில் இறங்கிய காவல்துறையினர், மிரட்டலை விடுத்தவர் தமிழகத்தின் புதுக்கோட்டை, திருக்கோணம் பகுதியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, லக்னோவிலிருந்து விமானத்தில் வந்த எஸ்.ஐ.டி சிறப்புப் படையினர், தமிழக காவல்துறை உதவியுடன் ராஜ் முகம்மதை அதிரடியாக கைது செய்தனர். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லக்னோவிற்கு விசாரணைக்கு கொண்டுசென்று விசாரிக்க உள்ளனர். இவ்வழக்கில், கர்நாடக காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.