புனேவில் உள்ள மகாராஷ்டிரா ஆரோக்கிய மண்டல் அமைப்பின், தாதா குஜாரின் மாதா பால் மருத்துவமனை திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார். தனது உரையில், “சமூகத்தில் உள்ள அலகுகள் அனைத்தும் வலுவாக உள்ளதாக கூறமுடியாது. எனவே, அதை உருவாக்குவதற்கு வலுவூட்டுவதற்கும் வலிமையைக் கொடுப்பதற்கும் தன்னிறைவை அடைய வைக்கவும் பணியாற்றுவது அவசியம். ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி போன்ற பல்வேறு சிகிச்சைகள் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்தால், எளிதான மற்றும் மலிவு விலையில் அனைவரும் சிகிச்சை பெற முடியும். தற்போது, சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாக உள்ளன. இந்த செலவினால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆயுர்வேதம் நோயை குணப்படுத்துவதுடன் முழுமையான ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. எனவே, ஆயுர்வேதத்தின் பல்வேறு கிளைகளையும் வலுவூட்டுவது அவசியம். நாம், ஒரு நாடாக, உலகிற்கு ஏதாவது கொடுக்க வேண்டும். அந்தத் திறமை நம்மிடம் இருக்கிறது. இதைச் செய்ய முடிந்தால், உலகில் வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக நாம் நிற்க முடியும். இதற்காக, தேசத்தின் மீதான பாசத்தையும், சொந்த உணர்வையும் வெளிப்படுத்துவது அவசியம்’ என கூறினார்.