பாகிஸ்தானில் உள்ள எங்கள் கிராம நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து, அவற்றின் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடித்து வருகிறது பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் என பாகிஸ்தானுக்கு எதிராக கில்ஜித், பல்ஜிஸ்தான் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அங்கு ஒரு வைரச் சுரங்கத்திற்கு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு உரிமம் வழங்கும் பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு எதிராக ஏராளமான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யக் கோரி இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கில்ஜித், பல்ஜிஸ்தானைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியின் போது மக்கள், ‘இது சர்ச்சைக்குரிய பகுதி, பாகிஸ்தான் இதனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது, உள்ளூர் சமூகங்களின் அனுமதியின்றி தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை குத்தகைக்கு விட பாகிஸ்தான் அரசுக்கு உரிமை இல்லை’ என்று கூறினர். இந்த ஒப்பந்ததாரர்களில் பலர் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நெருக்கமானவர்கள் என இஸ்லாம் கபர் செய்தி வெளியிட்டுள்ளது.