வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கும் அதன் அண்டை மாநிலமான அசாமுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள 36 கிராமங்களுக்கு மேகாலயா உரிமை கோரியது. அசாம் அதை ஏற்க மறுத்தது. இதற்கு தீர்வு காண, இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எல்லையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா, ‘உரிமை கோரப்பட்ட 36 கிராமங்களில் ஆறு கிராமங்களைத் தவிர மீதமுள்ள 30 கிராமங்களும் மேகாலயா மாநிலத்தின் பகுதிகளாக இருக்க இக்குழுவினர் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான இரு மாநில புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் கையெழுத்தானது. அது பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.