உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இதனையடுத்து சில நாட்களுக்கு முன், ‘இந்த பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் விபத்துக்குள்ளாகும், அது அமெரிக்கா, ஐரோப்பா, பாரதம், சீனா போன்ற பகுதிகளில் விழ வாய்ப்புள்ளது’ என ரஷ்யா கூறியிருந்தது. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோசின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், ரஷ்யாவின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள சோயூஸ் ராக்கெட்டில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகளை தொழிலாளர்கள் மறைப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார். ஆனால், அதில் நமது பாரதத்தின் கொடி மட்டும் மறைக்கப்படவில்லை. மார்ச் 5ல் ஏவப்படவுள்ள இந்த சோயூஸ் ராக்கெட் பல்வேறு நாடுகளில் இருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இதில், பார்தி ஏர்டெல் குழுமம் மற்றும் இங்கிலாந்து அரசு இணைந்து செயல்படுத்தி வரும் ‘ஒன்வெப்’ பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்கும் திட்டமும் ஒன்று. இதன் மூலம் 648 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். ஏற்கனவே 428 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. ‘இந்த ராக்கெட்டை ஏவுவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஒன்வெப் திட்டத்தில் அதன் அனைத்து பங்குகளையும் விற்க வேண்டும். ஒன்வெப் செயற்கைக்கோள்கள் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என்ற நிபந்தனைகளை ரோஸ்கோஸ்மோஸ் விதித்துள்ளது.