உக்ரைனில் சிக்கித் தவித்த 250 பாரத தேசத்தவர்களை ஏற்றிக்கொண்டு ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து இரண்டாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் வந்திருந்த மாணவர்கள், உக்ரைனில் இருந்து வேகமாக, பாதுகாப்பாக வெளியேற உதவிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மத்திய அரசு எங்களுக்கு மிக விரைவான தீர்வை வழங்கியது. 24 மணி நேரத்திற்குள் நாங்கள் வெளியேற்றப்பட்டோம். வெளியேற்ற திட்டமிடல், செயல்முறை வேகமாக நடக்கிறது. பாரத தூதரகமும் இந்தியன் ஏர்வேஸ் விமானமும் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டனர். எந்தத் தொகையும் எங்களிடம் வசூலிக்கவில்லை. பேருந்துகளில் பாரதக் கொடிகள் இருந்தன. நாங்கள் எங்கும் நிறுத்தப்படவில்லை. மாணவர்கள் சிலர் இன்னும் ருமேனிய எல்லையில் உள்ளனர். போக்குவரத்து காரணமாக அவர்களால் இப்போது எல்லையை கடக்க முடியவில்லை. உக்ரைனியர்களும் ருமேனியாவுக்கு குடிபெயர்கிறார்கள், அதனால் ருமேனியா எல்லையை மூடியுள்ளது என்பதும் ஒரு காரணம். எனினும் மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்தனர். ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற இந்த மீட்பு திட்டத்தின் மூலம் இன்னும் பலர் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.