மிகக் கடுமையான சவால்களுக்கு இடையே, பாரத தேசத்தவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனையடுத்து ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு நமது நாட்டவரை வரவைத்து அங்கிருந்து அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள பாரத தேசத்தவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது வெளியுறவுத்துறை. அவ்வகையில், ருமேனியாவில் இருந்து 219 பயணிகளுடன் ஒரு விமானம் பாரதம் கிளம்பியது. பயணிகளின் செலவை மத்திய அரசே ஏற்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மத்திய அரசு பாரத தேசத்தவர்களை இதுபோல பலமுறை மீட்டுள்ளது. இதனை பல உலக நாடுகளும் பாராட்டியுள்ளன. 2015ல் ஏமனில் இருந்து மீட்பு, 2020ல் சீனாவின் ஊஹானில் இருந்து மீட்பு, 2021ல் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு தற்போது உக்ரைனில் இருந்து மீட்பு என அதன் வெற்றிகரமான மீட்புகள் உலகறிந்தது. இன்னும் சொல்லப்போனால், பல வெளிநாட்டினரையும் கூட மத்திய அரசு இதுபோன்ற தருணங்களில் மீட்டுள்ளது என்பது வரலாறு. பாரத தேசத்தவர்கள் மீதான மத்திய அரசின் அக்கறையை நாம் உணர்ந்துகொள்ள, மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட உங்களை காப்பாற்ற பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வரும்’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வழக்கம்போல மத்திய அரசு திட்டங்களுக்கு தனது தி.மு.க ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளும் தமிழக அரசு, தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை, அதற்கு ஒரு அதிகாரி, 4 பணியாளர்கள் என ஏதோ தாங்களே சென்று மீட்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வருவதுடன், பயணிகளின் செலவை தமிழக அரசு ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது. உண்மையில், தற்போதைய போர் சூழலில், தமிழக அரசால், அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் கூட வாங்கித்தர முடியாது. எதுவாக இருந்தாலும் அது மத்திய அரசின் மூலம், அதன் வெளியுறவுத்துறையின் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இதற்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. மத்திய அரசு தனது கடமையினை மிகச் சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது. இதற்கு முந்தைய உதாரணங்கள் உள்ளன. இதில், தமிழக அரசு ஏதாவது செய்ய விரும்பினால், உக்ரைனில் இருந்து வரும் தமிழர்களின் போக்குவரத்து செலவை மத்திய அரசுக்கு சொன்னபடி கொடுக்கட்டும். ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதை நிறுத்தட்டும்.