தி.மு.கவினர் மீதே புகாரா?

கோவை மாநகராட்சி 97வது வார்டில் தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மகள் நிவேதா போட்டியிடுகிறார். 38வது வார்டை சேர்ந்த இவர், வார்டு மாறி போட்டியிடுகிறார். இதனால் ஏற்கனவே கட்சியினருக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. இவரை எதிர்த்து தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி சுயேச்சையாக போட்டியிடுகிறார். மற்றொருபுறம் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த நிரஞ்சனா தேவியும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் நிவேதாவுக்கு எதிராக புகாரளித்தார். அதில், ‘நிவேதா, 591 வீடுகளுக்கு இட்லி குக்கர் வினியோகித்துள்ளார். அக்கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களிடம் பேரம் பேசுகின்றனர். வேட்பாளர்களை விலைக்கு வாங்க 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு தலா ரூ. 1,000 கொடுத்து ஓட்டுகளை வாங்குகின்றனர். இதனால் நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். சுயேச்சையாக நின்றதாலும், கூட்டணித் தலைமையான தி.முக மீதே குற்றம் சாட்டியதாலும், நிரஞ்சனா தேவி, அவரது கணவர் விஜயகுமார் என இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.