திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 25 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராடி வரும் மக்களை அழைத்து பேசாமல், மாவட்ட நிர்வாகம் அவர்களை அச்சுறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. அப்பகுதி மக்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். எனவே, சிப்காட் வளாகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் எனக்கூறி, சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் எதிர்த்தார். அதே காரணம் இதற்கும் பொருந்தும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை சுட்டிக்காட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மிரட்டியுள்ளார். யார் எதிர்த்தாலும் இங்கு சிப்காட் வளாகம் அமைத்தே தீருவோம் என்று அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் கூறியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட வேண்டும்’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.