புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், நாட்டின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும், தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும், மத்திய அரசை இழிவுபடுத்தும் நோக்கில், ‘ஒன்றிய அரசு’ என அழைக்கின்றனர். இதனால், பாரத அரசின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்படுவோம் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வரும் அமைச்சர்களும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடக்கின்றனர். அவர்களால் பள்ளி பாடப்புத்தகங்களிலும், ‘ஒன்றியம்’ என்ற வார்த்தை இடம் பெற்று விடும் ஆபத்து உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வேண்டுமென்றே, அவ்வார்த்தையை பயன்படுத்தினர். இம்முறை அது நடக்கக் கூடாது. மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என மொழிபெயர்க்க அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்களும் நீட் தேர்வை வரவேற்கின்றனர். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு நிறைவேற்றி உள்ள தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.