‘இணக்கச் சுமையைக் குறைப்பதற்கான அடுத்த கட்ட சீர்திருத்தங்கள் குறித்த தேசியப் பயிலரங்கில்’ உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதார், பான், டின் போன்ற பல அடையாள எண்கள் உள்ளன. இவற்றை இணைத்து ஒரே அடையாள எண்ணை உருவாக்க முடியாதா? ஒரே எண் போன்ற யோசனைகள் மிகவும் தர்க்கரீதியானவை. பல விஷயங்களை உள்ளடக்கிய அமெரிக்க சமூகப் பாதுகாப்பு எண் போன்ற ஒன்றைக் கொண்டு வர முடியாதா? எளிமையாக வாழ்வதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட முந்தைய வழிமுறைகளால் 25,000க்கும் மேற்பட்ட தேவையற்ற நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன’ என்றார். மேலும், டிஜி லாக்கர் மற்றும் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு போன்ற பல்வேறு சேவைகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த கோயல், ‘இதனால் மீண்டும் மீண்டும் செயல்முறைகள் பகுக்கப்படுகின்றன, இடைவெளிகள் குறைக்கப்படுகின்றன. ஒப்புதல்கள், அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையற்ற நடைமுறைகள், நேரம் குறைக்கப்படுகின்றன. இவற்றை வடிவமைக்கும் போது அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும், குறிப்பாக பயனர்களிடமிருந்தும் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அடிப்படை உண்மைகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.