திருப்பாவை 9

முந்தைய பாசுரங்களில்  தோழியாக, தலைவியாக அனுபவித்த ஆண்டாள் அதோடு திருப்தி பெறாமல் பகவத் சம்பந்தமுடைய திருவாய்ப்பாடிப் பெண்களோடு ஒரு சரீர சம்பந்தத்தை ஆசைப்படுகிறாள். உறங்குகிறவள் நண்பி அல்லது கண்ணனின் பக்தை என்கின்ற படியெல்லாம்தாண்டி, அப்பெண் தனது ரத்த உறவாக அமைந்து விட்டால் நெருக்கம் இன்னும் கூடுதலாக இருக்கும் அல்லவா?

“பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச் சூழ விளக்கெரிய, நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சு மெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! மணிக்கதவைத் திறப்பாயாக!” என்று அழைத்து ரத்த சம்பந்த உறவையும் விரும்பி அனுபவிக்கிறாள். அது மட்டுமல்ல, விரைவாக எழுப்ப அவளது தாயின் துணைதனையும் வேண்டி, அவளையும்  உறவு நிலையில் நிறுத்தி “அன்பு மாமியே! மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், ‘வைகுந்தன்’ என்றும் நாவால் சொல்லி அவன் மனதில் நிறுத்திக் கொள்கிறோமே. உன் மகள் துயிலெழ மாட்டாளோ? உடனே எழுப்பவும்” என்று உறவு கொண்டாடுகிறாள்.