கோவை மாவட்டம் அன்னூர் பகுதி குன்னிபாளையம், அக்கரை செங்கபள்ளி, வாக்கானாம் கொம்பு, ஆத்திகுட்டை, குழியூர் கிராம விவசாயிகள் அங்கு அமைய உள்ள டிட்கோ தொழிற்பேட்டையை எதிர்த்து போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், தி.மு.க எம்.பி ஆ. ராசா ஆகியோரை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்பகுதி விவசாயிகளை வீடு தேடிச் சென்று நேரில் சந்தித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘பல ஏக்கர் விவசாய நிலங்களுடன் குடி இருக்கும் வீட்டையும் இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் தவித்து வரும் விவசாயிகள் நடத்திவரும் இந்த அறப்போராட்டத்திற்கு தமிழக பா.ஜ.க ஆதரவு அளிக்கும். அவினாசி அத்திக்கடவு திட்டம் மூலமாக பயனடையவுள்ள இந்த பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கவிருக்கும் தமிழக அரசின் இந்த முயற்சியைத் தடுக்க அனைத்து போராட்டங்களையும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துச் செல்லும்’ என உறுதி அளித்துள்ளார். மேலும், விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திட்டத்தை தி.மு.க தலைமையிலான அரசு உடனடியாக கைவிடவேண்டும். விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.