உத்தர பிரதேசத்தில் வரும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15, 2021 வரை, ‘பள்ளங்கள் இல்லாத சாலைகள்’ என்ற சிறப்பு இயக்கத்தை அம்மாநில அரசு நடத்துகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான சாலைகளையும் குண்டு குழிகள் இல்லாதவாறு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தெரிவித்தார். மேலும், ‘மாநிலத்தில் எங்கு கட்டுமானப் பணிகள் உரிய காரணம் இன்றி மெதுவாக இருந்தாலும், மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவொரு வேலையும் ஒப்பந்தக்காரர்களால் தேவையின்றி தாமதமாகிவிட்டால், அவர்களின் நிறுவனத்தை சட்ட விதிகளின்படி தடுப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டும். உ.பியை மற்ற மாநிலத்துடன்இணைக்கும் 105 வழித்தடங்களிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் ‘உத்தரபிரதேசத்திற்கு வருக, உத்தரபிரதேசத்திற்கு வந்ததற்கு நன்றி’ என்ற வார்த்தைகள் எழுதப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.