மேற்கு வங்கத்தில் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த சைலன் கர்மாகர், அசித் கோஷ் ஆகிய இருவரும் கொல்கத்தா அருகே உள்ள என்.எஸ்.சி.பி.ஐ விமான நிலையம் அருகே பிடிபட்டனர். அவர்களிடம் 250 கிராம் எடையுள்ள நான்கு சாம்பல் நிற கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இதனை அவர்கள் கேரளாவில் இருந்து வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்ததாகவும் அதனை சில லட்சங்களுக்கு விற்க முயன்றதாகவும் தெரிந்தது. அது, அணு உலைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை கதிரியக்க பொருளான சிந்தடிக் கலிஃபோர்னியமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சந்தை மதிப்பில், இது ஒரு கிராம் 170 கோடி ரூபாய். எனவே இதன் மொத்த மதிப்பு ரூ. 4,250 கோடியாக இருக்கலாம். கலிபோர்னியம் இயற்கையில் கிடைப்பதில்லை. எனவே, இது எதாவது ஆய்வகத்தில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம். இது அணு உலைகள் மற்றும் தாதுக்களில் தங்கம் மற்றும் வெள்ளியை கண்டறிவதிலும் இது பயன்படுத்தப்படுகிறது என சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.