ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும்தான். பத்து நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா ஆவணி மாதத்தில் வளர்பிறை அஸ்தம் நட்சத்திர நாள் தொடங்கி திருவோண நட்சத்திர நாளோடு முடிவடைகிறது. இவ்விழா கேரளாவின் அறுவடைத் திருநாள், கேரளத்து தீபாவளி, கேரளத்து புத்தாண்டு என பல்வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது. இப்பண்டிகை கேரளா, தென் தமிழகம், மலையாள மக்கள் உள்ள அனைத்து இடங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது என்பதனை மதுரைக்காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூலிலும், திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் பாடியுள்ளதன் மூலம் அறியலாம். கேரள மாநிலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்ததை செப்புத்தகட்டு செய்தி மூலம் அறியமுடிகிறது.
விழாவின் பத்து நாட்களிலும் மக்கள் பூக்கோலங்கள் வரைந்து இவ்விழாவின் நாயகனான மகாபலியை வரவேற்கின்றனர். வெண்ணிற ஆடைகளுடன் பெண்களின் கைகொட்டு களி நடனம், கலை கலாச்சார நிகழ்ச்சிகள், படகுப் போட்டிகள், யானை அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பண்டிகையின் போது கசப்பு சுவையினைத் தவிர ஏனைய சுவைகளில் 64 வகையான உணவுப் பொருட்கள் தயார் செய்து ஓண விருந்தினை சுவைக்கின்றனர்.
பக்த பிரகலாதனின் பேரனான மகாபலி சர்க்கரவர்த்தி நடத்திய யாகத்தில், வாமனராக வந்த மகாவிஷ்ணு, தனக்கு மூன்றடி நிலம் தானமாக கேட்டார். சுக்ராச்சாரியார் எச்சரித்தும், தனக்கு நேரும் இன்னல்கள் பற்றி கவலைப்படாமல் வாமனர் கேட்ட மூன்றடி நிலத்தை தானம் வழங்கினார் மகாபலி. விண்ணையும் மண்ணையும் இரண்டு அடிகளாக அளந்த வாமனருக்கு, மூன்றாவது அடியாக பலிச்சர்க்கரவர்த்தி தன் சிரசினை தந்தார். வாமனரும் பலியின் தலையில் கால்வைத்து அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். அப்போது வாமனரிடம் ஆவணி திருவோணத்தன்று தன் மக்களை கண்டு செல்ல அனுமதி கேட்டார் மகாபலி. விஷ்ணுவும் வரம் வழங்கினார்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் ஓணத்திருநாளன்று தம் மக்களை காண மகாபலிச் சக்கரவர்த்தி வந்து ஆசி வழங்கி, மீண்டும் பாதாள லோகம் செல்வதாகக் கருதப்படுகிறது. எனவே தங்கள் மன்னனனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர் கேரள மக்கள். நாமும் மகாபலியை வரவேற்று, அவரின் வாழ்த்துக்களுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வோம்.