உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தம் குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க என பல்வேறு வகைகளில் ஆயுர்வேத சிகிச்சையில், ‘அஸ்வகந்தா’ என்ற மூலிகை கலந்த மருந்துகள் தரப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் இது ‘அமுக்கிரா’ என அழைக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும் பல இடங்களில் அஸ்வகந்தா அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரிட்டனின் லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் என பல பகுதிகளில் 2 ஆயிரம் பேரிடம் இந்த பரிசோதனைகள் விரைவில் துவங்க உள்ளது.