‘திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனைக் காரணம் காட்டி அதிகாரிகள் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும்’ என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார். ஆனால் தற்பொழுது ’15 நாட்கள் முழு ஊரடங்கை அரசு பிறப்பித்தால் எங்கள் சார்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தருவோம்’ என்று கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளராக, விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா வெற்றி பெற்றார். இப்பொது அமைந்திருப்பது தி.மு.க ஆட்சி. அதனால், அ.தி.மு.க ஆட்சியில் ஊரடங்கு வேண்டாம் என கூறியவர் தற்பொழுது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே சிறந்தது என விக்கிரமராஜா நினைத்துவிட்டாரோ என மக்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.