கொரோனா பெருந்தொற்று உலகில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த இக்கட்டான காலத்தை பயன்படுத்தி ஏமாற்றி வருமானம் பார்ப்பவர்களும் பெருகி வருகிறார்கள். ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை அறிந்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய கவுதம் என்பவர் போலி ரெம்டெசிவிர் ஊசிகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் ஹரித்வார், ரூர்கி, கோத்வார் ஆகிய பகுதிகளில் சோதனை செய்தனர். அங்கிருந்து விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 196 போலி ரெம்டெசிவிர் ஊசிகள், 3,000 காலி மருந்து குப்பிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த போலி தொழிற்சாலை நடத்தி வந்த ஆதித்ய கவுதம் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரெம்டெசிவிர் ஊசி ஒன்றினை 25,000 ரூபாய்க்கும் மேல் விலை வைத்து விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட போலி ரெம்டெசிவிர் ஊசிகளை விற்பனை செய்துள்ளது. இதனை கண்டறிய ஒரு சிறப்பு காவல் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவத்சவா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.